திருவெம்பாவையின் நான்காம் பாடல் இன்னொரு பெண் வீட்டு வாசலில் தொடங்குகிறது. அவளும் முத்தனைய சிரிப்பழகிதான். ஒளிவீசும் நித்திலமோ ,உறங்குவதால்,ஒளிந்திருக்கும் நித்திலமோ–ஒண் நித்தில நகையாய் இன்னும் உனக்கு விடியவில்லையா என அழைக்கிறார்கள்.
உடனே அவள் “வண்ணக் கிளி மொழியார் எல்லோரும் வந்தாரோ” என்கிறாள்.கிளிபோல் அழகிய மொழியுடைய தோழியர் என்பது வெளிப்படையாகத் தோன்றும் பொருள். எல்லாப் பெண்களும் ஒன்று போல் சிவநாமங்களை உரக்கச் சொன்ன வண்ணம் வருவதால் அவர்களைக் கிளிமொழியார் என்கிறாள்.
எல்லோரும் வந்துள்ளனரா என எண்ணிச் சொல்லுகிறோம் என்றவர்கள், “அதுவரை உறக்கத்தில் காலத்தைப் போக்காதே.நாங்கள் விண்ணுக்கொரு மருந்தாகவும், வேதத்தின் நிலையான பொருளாகவும் கண்ணுக்கு இனியவனாகவும் இருக்கும் சிவனைப் பாடி உள்ளம் கசிந்துருகி நிற்கிறோம். எனவே நாங்கள் எண்ணப் போவதில்லை. நீ வேண்டுமானால் எண்ணிப் பார். ஆள் குறைந்தால் எல்லோரும் வரும் வரை உறங்கு” என்கிறார்கள்.
இதனை வேறு விதமாக யோசித்தால், சிவனை சிந்திப்பது போலவே சிவனடியார் உறவும் முக்கியமல்லவா,மற்ற பெண்களை எண்ணிக் கொண்டிருக்க மாட்டோம் என்று சொல்லலாமா என்றொரு கேள்வி எழலாம்.
சிவபக்தி கொண்டபெண்கள் வெறுமனே நின்று கொண்டிருந்தால் தலையை எண்ணி விடலாம். எல்லோரும் சிவநாமத்தைப் பாடிக் கொண்டல்லவா இருக்கிறார்கள்! அப்போது ஏற்படும் அதிர்வில் உள்ளம் நெக்குருகும் போது தலைகளை எண்ணத் தோன்றாது.
இரண்டாவது இந்தப் பெண்கள் பலராக இருந்தாலும் உள்ள உருக்கத்தாலும் உணர்வாலும் சிவ சிந்தனையில் ஒருமித்து நிற்பதால் இவர்களை தனித்தனியே பிரித்தறிய முடியாது என்றும் தோன்றியிருக்கக்கூடும் அல்லவா! எனவே “யாம் மாட்டோம்” என்கின்றனர்.
உள்ளே இருப்பவள் வெளியே வந்தால் அவளும் இந்த இறையுணர்வில் கலந்து கசிந்திடுவாள். அவளாலும் எண்ண முடியாது என்பதை உணர்த்தவே “முடிந்தால் நீயே வந்து எண்ணிக்கொள்” என்கின்றனர்.
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ
எண்ணிக்கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக்கு ஒருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள் நெக்கு நின்றுருக யாம் மாட்டோம் நீயே வந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்.