பன்முகப் பண்புகள் என்னும் ஈடிலாத தன்மையின் பிரம்மாண்டமாகவும் எல்லைகளைக் கடந்த வியாபகமாகவும் சிவன் விளங்குவதை சிந்தித்து வியக்கும் விதமாய் திருவெம்பாவையின் பத்தாம் பாடல் அமைந்துள்ளது.
எல்லோருக்கும் எல்லாமாக நிற்கும் சிவனை எவ்வாறு வரையறுப்பது என்னும் இன்பத் தவிப்பே இப்பாடலின் உயிர்நாடி.சொல்லால் எட்டப்படாத தொலைவில் பாதாளங்களுக்கும் அப்பால்,அவன் பாதமலர்கள் உள்ளன. அவன் திருமுடியும் தேடிக் கண்டடையும் இடத்திலில்லை. அவன் திருமேனியின் ஒரு பாகம் பெண்பாகம் என்னும் வரையறையும் அவனை உணர்ந்ததாய் ஆகாது.
ஏனெனில் அவன் ஒரே திருமேனி கொண்டவனல்லன்.
உருவாய்,அருவாய் அருவுருவாய் பற்பல தன்மைகள் கொண்டவன்.
வேதமறிந்த விண்ணோரும் மண்ணோரும் அவனை விதம் விதமாய்த் துதித்தாலும் அத்தனை பெருங்குணங்களையும் கடந்த எளிமையுடையவனாய் தோழனாய் விளங்குபவன்.
தொண்டர்களின் உள்ளங்களெல்லாம் நிற்பவன். இவனை வணங்கும் தன்மை கொண்ட குற்றமற்ற குணப் பண்புகள் கொண்ட பெண்களே!
உங்களால் முடிந்தால், இவனுடைய ஊர் இதென்றும் இவனுடைய பேர் இதென்றும்,இவனுக்கு வேண்டியவர்கள் இவர்களென்றும் வேண்டாதவர்கள் இவர்களென்றும் வரையறுத்துச் சொல்லுங்கள்.இப்படிப்பட்டவனை எப்படிப் பாடுவது?” என்னும் செல்லச் சலிப்பை இப்பாடலின் பெருஞ்சிறப்பாகும்.
வேண்டுதல் வேண்டாமை இலான் எனும் திருக்குறளும் “ஓருநாமம் ஓருருவம் இல்லார்க்கு திருநாமம் பலபாடி”என்னும் திருத்தெள்ளேணமும் இங்கு நம் நினைவுக்கு வருகிறது.
பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்து அரன் தன் கோயில் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன் ஊர் ஏதவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலார் எம்பாவாய்