( இன்று சர்வதேசமருத்துவ நிபுணர்களாகத் திகழும் டாக்டர் ராஜசபாபதி, டாக்டர் ராஜசேகர் ஆகியோரின் தந்தை மருத்துவர் சண்முகநாதன். தாயார் திருமதி கனகவல்லி. இவர்களின் முயற்சியில் எழுந்ததே கோவை கங்கா மருத்துவமனை. இது உருவான விதம் பற்றி “ஓர் அன்னையின் கனவு” என்றொரு நூல் எழுதினேன். நூலின் நாயகிக்கு கடிதமாக எழுதியதே நூலின் முன்னுரையானது)
மதிப்பிற்குரிய கனகவல்லி அம்மா அவர்களுக்கு,
மரபின்மைந்தன் எழுதுகிறேன். வணக்கம்.கடிதம் எழுதும் கலையில் நீங்கள் கைதேர்ந்தவராம்.உங்கள் புதல்வர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
உங்களுக்கொரு கடிதம் எழுதத் தோன்றியது.இன்று ஜூன்12. அதிகாலை
நாலேகால் மணி.
.உங்களைப்பற்றிய புத்தகத்துக்கு மெய்ப்பு பார்த்த கையோடு இந்தக்
கடிதத்தை எழுதுகிறேன்.கோவையில் பல்லாண்டுகளாக உங்களைப்
பல இடங்களில் பார்த்திருக்கிறேன்.நீங்களும்,உங்கள் அன்புக் கணவர்
டாக்டர் சண்முகநாதன் அவர்களும் கலை இலக்கிய அரங்குகளில்
நுழையும்போதெல்லாம் முன்வரிசை பொன்வரிசையாகும்.
திரு.ம.கிருஷ்ணன் அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்து கொண்டுவிழா முடிவில்,பேச்சாளர்கள் இறங்கிவரும்வரை காத்திருந்து,அவர்களைமனம்குளிரப் பாராட்டும் பண்பு உங்கள் இருவரிடமும் இருக்கும்பெருந்தன்மை.அப்படித்தான் உங்களுடன் அறிமுகமானேன்.
பின்னர் ஒருமுறை,திருவானைக்காவலில் உங்கள் குடும்பம் நடத்தும்
அருள்மிகு வீரபத்திரர் வழிபாட்டு விழாவில் பேச,சொல்வேந்தர் சுகிசிவம்
அவர்களுடன் வந்திருந்தேன்.அந்த விழாவில் எனக்குப் பெரும் வியப்பு,
சர்வதேச அளவில் புகழ் பெற்று தினமும் ஆயிரக்கணக்கானவர்கள்
சந்திக்க ஏங்கும் மருத்துவ நிபுணர்களாகிய உங்கள் புதல்வர்கள் இருவரும்,விழா பந்தலின் இருபுறமும் எளிய தொண்டர்களாய் நின்று,
வருபவர்களை அமரவைத்துக் கொண்டிருந்த காட்சிதான்!!
திருவாரூரில் சுந்தரருக்காக பரவை நாச்சியாரின் வீட்டுக்கு சிவபெருமான் தூதாகப்போனதைப் பாடுகையில் காள்மேகம்,”சிவபெருமானின் அடிமுடி தேடி பிரம்மா அன்னப்பறவையாகவும் திருமால் பன்றியாகவும் வடிவெடுத்துத் தேடியதெல்லாம் வேண்டாத வேலை.பரவை நாச்சியார் வீட்டு வாசலுக்கு மேலும் கீழும் இருவரும் நின்றிருந்தால் அடிமுடியை
எளிதாகப் பார்த்திருக்கலாமே” என்றார்.
இந்த மருத்துவ நிபுணர்கள் இருவரையும் காண ஏங்கும் உலக நோயாளிகள் அந்த வழிபாட்டு தினத்தில் திருவானைக்காவல் வந்தால்
எளிதில் பார்த்து விடலாமல்லவா!என்று தோன்றியது.அந்த மேடையிலும்
இதைக் குறிப்பிட்டேன்.
பின்னர் ஒருமுறை உங்கள் மருத்துவமனையில் குடியரசுத் திருநாள்
கொண்டாட்டங்களுக்குக் கொடியேற்ற அழைத்தீர்கள்.
கோவையில் திரு.கிருஷ்ணன் அவர்கள் தொலைபேசி உரையாடல்களில்
பலமுறை உங்களைப்பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.உங்கள் தாய்மைப்பண்பை,தயாள குணத்தை,திட்டமிடுதலை வியந்து சொல்லியிருக்கிறார்.சென்னையில்,அவருடைய சகோதரர் திரு.முரளி,
“தாய்மைக்கு வணக்கம்” என்ற உன்னதமான விழாவில் சாதனையாளர்களை இன்று புறந்தந்த அன்னையரைப் பணிந்து
போற்றும்போது தங்களுக்கும் மரியாதை செய்தார்.
அதனையொட்டி கோவையில் நடைபெற்ற பாராட்டுவிழாவில்
பேச,நான் அழைக்கப்பட்டிருந்தேன்.அப்போது நீங்கள் நிகழ்த்திய ஏற்புரை
என்னை மலைக்கச் செய்தது.அலங்காரமில்லாத இயல்பான நடையில்
வாழ்க்கை உண்மைகளை நீங்கள் விவரித்த விதம்,வியக்கச் செய்தது.
எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது.விழா முடிந்து வீடு திரும்பிக்
கொண்டிருக்கும்போதே திரு.கிருஷ்ணன் அவர்களை அலைபேசியில்
அழைத்தேன்.அவரும் அந்த விழாவின் மூலசக்தியாக வெளிப்பட்ட
உண்மையின் பிரவாகத்தில் அமிழ்ந்திருந்தார்.உங்கள் வாழ்க்கை
நூலாக பதிவு செயப்படும் எண்ணம் அங்கேதான் எழுந்தது.
இந்தப் பணியை திரு.கிருஷ்ணன் முழுமையாக முன்னெடுத்துச்
சென்றார்.உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவருடைய
கவனம் இதன்மேல் இருந்தது.
நூல் உருவாக்கம் தொடர்பாக உங்களுடன் அமர்ந்த முதல்நாளிலேயே
உங்களின் உரையாடல் திறனில் அசந்துவிட்டேன்.நீங்கள் பிறந்த அந்த
வைகாசி வெள்ளிக்கிழமையில்,மகுடஞ்சாவடி வீட்டின் முன்புறம்
பற்றிய உங்கள் வர்ணனையிலேயே,இந்தப் புத்தகம் தன்னை எழுதிக்
கொள்ளத் துவங்கியிருந்தது.இந்தப் புத்தகம் உருவாவதில் உங்கள்
கணவரும்,புதல்வர்களும்,மருமகள்களும்,பெயரன் பெயர்த்திகளும்
காட்டிய அக்கறை அபரிமிதமானது.
கோவை கங்கா மருத்துவமனை-ஓர் அன்னையின் கனவு என்ற தலைப்பைச் சொன்னதும் நீங்கள் சொன்ன வார்த்தை,”இல்லையில்லை!
இது என் கணவரின் கனவு”என்பதுதான்!
உண்மையில் உங்கள் கனவும் அவர் கனவும் வேறல்ல.அநேக வகைகளில் நீங்கள் அர்த்தநாரீஸ்வர தத்துவத்தின் அழகிய வெளிப்பாடு.
உங்கள் கருவில் பிள்ளைகள் வளர்ந்தது போலவே உங்கள் கனவில்
இந்த மருத்துவமனை வலர்ந்தது.
இன்றைய உலகம் பயில வேண்டிய மருத்துவ ஆய்வுகள் மட்டுமின்றி,
ஆழமான வாழ்வியல் பாடங்களும் கங்காவின் அறிவுக்கொடையாய்
விளங்குகின்றன.
தங்கள் மாமனார் அமரர் கங்காதரன் பிள்ளை அவர்கள் நினைவாக இந்த
மருத்துவமனை எழுந்தாலும்,கங்கை நதியின் புனிதம், சக்தி,நீரோட்டம்,
பாரம்மபரியம்,அத்தனையும் கங்கா மருத்துவமனைக்கு உண்டு.
இந்தப் புகழ்நதியின் நதிமூலம் நீங்கள்.
ஆதியில் கிளம்பிய நதிக்கென்று பாதைகள் ஏதுமில்லை.தன்னுடைய
பாதையைத் தானே வடிவமைத்துக் கொண்டதால்தான் நதியைத் தமிழில்
ஆறு என்கிறோம்.ஆறு என்றால் வழி.தன்னுடைய வழியைத் தானே
அமைத்துக் கொண்ட கங்கா, தன் வெற்றி ஓட்டத்துக்கான வரைபடங்களை
உருவாக்கிய விதமறியும் முயற்சியே இந்தப் புத்தகம்.
தாய்மையின் கனிவும் தாய்மையின் துணிவும் என்னவெல்லாம் சாதிக்கும்
என்பதை விளக்க உங்கள் வாழ்க்கையே உதாரணம்.கனகவல்லி அம்மா என்னும் பெண்மணி,பெண்மையின் பெரும்சக்தியாய் எழுந்ததை,
கனிவாலும் கண்டிப்பாலும் சாதனையாளர்களை வளர்த்தெடுத்து ஒரு
சாம்ராஜ்யத்தை உருவாக்கியதை இந்தப் புத்தகம் பேசுகிறது.
இந்த நூல் உருவாக எல்லா ஒத்துழைப்புகளும் தந்த உங்கள் குடும்பத்தினருக்கும்,ந்த முயற்சியை முழுமையாக முன்னெடுத்துச் சென்ற திரு.கிருஷ்ணன்அவர்களுக்கும் என் நன்றிகள்
இந்த நூலுக்குப் பொருத்தமாய் கங்கை குறித்த மிக அபூர்வமான
தகவல்களை வழங்கியவர்,பத்து வயதிலேயே அருள்நிலை எய்தி,
தெய்வீக வாழ்வு வாழ்ந்து வரும் பாலா பீடம் தவத்திரு விஸ்வசிராஷினி
அவர்கள்.அவர்களுக்கு என் வணக்கங்களும் நன்றிகளும்.
இருபத்தோராம் நூற்றாண்டிற்கு,கூட்டுக் குடும்பத்தின் சக்தியை உணர்த்த
இந்தக் குடும்பத்தின் கதையே விதை.அணைந்து விடாத இலட்சிய
நெருப்பால், அயராத உழைப்பால்.மூண்டெழும் முனைப்பால்,உருவான
கங்கா மருத்துவமனை…ஓர் அன்னையின் கனவு!!
தாய்மையின் தனி இலக்கணமாய் விளங்கும் உங்களையும் தன் வாழ்க்கை
விழுமங்களால் மலைபோல் நிற்கும் உங்கள் அன்புக் கணவர் டாக்டர்
சண்முகநாதன் அவர்களுக்கும் என் வணக்கங்கள்.
அன்புடன்
மரபின் மைந்தன் முத்தையா