பொன்னுக்கு வீங்கிகள் பூமியில் ஒருநாள்
புத்தன் வந்து சேர்ந்தானாம்
கண்ணுக்குள் ஏதோ வெளிச்சம் கண்டவர்
கைகள் கூப்பித் தொழுதாராம்
இனனமும் தங்கம் சேர்க்கும் வழிகள்
இவரே சொல்வார் என்றாராம்
மண்ணைப் பொன்னாய் மாற்றிட நமக்கு
மந்திரம் தருவார் என்றாராம்
மன்றத்தில் ஒருநாள் புத்தனை அமர்த்தி
மாலைகள் எல்லாம் போட்டாராம்
பொன்னாடைகள் பலப்பல ரகங்களில்…
புத்தன் மிரண்டு போனானாம்
“இன்னும் ஒருசில நொடிகளில் அய்யா
இன்னுரை நிகழும்” என்றாராம்
மின்னல் போலே வெளியிலிருந்து
மக்கள் மேலும் வந்தாராம்
ஆசையே துன்பத்தின் காரணம் என்றதும்
அத்தனை பேர்களும் சிரித்தாராம்
பேசும் உத்தியில் நகைச்சுவை நன்றென
பலமாய்க் கரவொலி செய்தாராம்
கூசிப் போன புத்தன் கொஞ்சம்
குவளைத் தண்ணீர் குடித்தானாம்
மேசையில் இருந்த துவாலை எடுத்து
முகத்தைத் துடைத்துக் கொண்டானாம்
பகையைத் தவிர்க்க அன்பே வழியென
புத்தன் பேச்சைத் தொடர்ந்தானாம்
தொகையைத் தந்து கொலைகள் புரிவோர்
தமக்குள் முனகிக் கொண்டாராம்
தகுதியில்லாதோர் நட்பு தவறென
திருமகன் அடித்துச் சொன்னானாம்
நகரம் வட்டம் ஒன்றியம் எல்லாம்
நொடியில் வதனம் சிவந்தாராம்
இந்த மனிதரை என்ன செய்யலாம்.
ஏற்பாட் டாளர் நினைத்தாராம்
தந்த நேரம் முடிந்த தென்று
துண்டுச் சீட்டு கொடுத்தாராம்
சொந்தக் கதைகள் பேசிச் சிரிக்கும்
சொற்பொழிவாளரை அழைத்தாராம்
வந்த புத்தன் இனிமேல் மண்ணில்
வாரேன் என்று மறைந்தானாம்