எத்தனை எத்தனை நாமங்கள்
மூன்று பெரும் தேவியர்கள் இருக்கிறார்கள் அந்த மூவருக்கும் நாயகியாக இருப்பவள் பராசக்தி. நான்முகனின் நாயகியாகிய கலை வாணியின் ஆன்ம சக்தியாக அவள் இயங்குகிறாள். திருமாலினுடைய மார்பிலே எழுந்தருளியிருக்கிற திருமகளுடைய சக்தியாகவும் பராசக்திதான் விளங்குகிறாள். நமக்கு வானுலகைத் தந்துவிட்டு அவள் போய் இருக்கிற இடம் சதுர்முகமும், பைந்தேன் பரிமளயாகம் என்று முன்னாலேயே சொல்லியிருக்கிறார். இந்த மூன்று அம்சங்களும் அவளுடைய ஆட்சி. அந்த நாயகியே நான்முகியாகவும் நாராயணியாகவும் உள்ளாள். தாமரை போன்ற திருக்கரங்களில் மலர்கள் கொண்டிருக்கிறாள்.
தாமரை போன்ற கரங்கள் கொண்டவள் சம்பு என்பது சிவப்பெருமானுக்குரிய திருநாமங்களிலே ஒன்று. சம்பு என்பது சுயம்பு, தானாகத் தோன்றுவது. பிறப்பும் இறப்பும் இல்லாத கடவுள் சிவபெருமான், அவரின் துணைவி சாம்பவி. அவள் இமவானுக்கு மகளாகப் பிறப்பாள். தட்சனுக்கு மகளாகப் பிறப்பாள். ஆனால் அடிப்படையில் அவள் சுயம்பு.
சங்கரி என்ற சொல்லிற்கு இதம் செய்பவள் என்று பொருள். வாழ்க்கையில் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் அவளுடைய சந்நிதியில் போய் அம்மா என்று அமர்ந்தால் இதம் செய்பவள். சாமளை என்றால் நீலநிற மேனியுடையவள்.
நாகப்பாம்புகளால் செய்யப்பட்ட மாலையை அணிந்தவள். பார்த்தாலே விஷம் என்று சொல்லக்கூடிய பாம்புகளை அவள் மாலையாக அணிந்திருக்கிறாள். அதற்கு என்ன அர்த்தம்? பாம்பு என்பது குண்டலினி ஆற்றலின் குறியீடு. ஒரு மனிதனுக்கு தவம் மூலமாகவோ, குண்டலினி ஆற்றல் எழுச்சி பெறும். ஆனால் எழுச்சி பெற்ற குண்டலினி ஆற்றலை கட்டுக்குள் வைத்திருப்பது என்பது ஒரு குருவினுடைய வேலை. தெய்வத்தினுடைய வேலை.
சிவபெருமான் உச்சந்தலையில் பாம்பை அணிந்திருக்கிறார் என்றால் உச்சந்தலை வரை குண்டலினி பாயப் பெற்றவர் என்பது அவரது குறியீடு. நம்மால் கையாள முடியாத குண்டலினி ஆற்றலை மாலையாக அணிந்திருக்கிறாள்.
திருமால் வராக அவதாரம் எடுத்தார். அது சக்தியினுடைய ஆண் வடிவம். வராகி என்ற தோற்றத்தில் அம்பிகையினுடய திருக்கோவில் உண்டு. அவள் வரப்பிரசாதி.
சூலினி என்றால் கையில் சூலம் வைத்திருப்பவள். மதங்க முனிவருக்கு மகளாகப் பிறந்தவள் மாதங்கி. இப்படி எண்ணற்ற திருநாமங்களையும் பெருமைகளையும் கொண்டவள் நமக்கு அரணாக இருக்கிறாள் என்கிறார் அபிராமி பட்டர்.
‘நாயகி நான்முகி நாராயணிகை நளினபஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு
வாயகி மாலினி வாரகி சூலினி மாதங்கிஎன்
றாயகி யாதி உடையாள் சரணம் அரண்நமக்கே’.