பழைய கதை..அரசாட்சியில் அன்று!!
———————————————————-
அத்தனை குடிமக்களையும் ஓர் அரசர், பொதுவில் வைக்கப்பட்டிருந்த அண்டாவில் ஒரு குவளை பாலூற்றச் சொன்னாராம். “யாருக்குத் தெரியப் போகிறது என்றொரு குடிமகன் ஒரு குவளை தண்ணீரை ஊற்றினானாம். அப்படியே அனைத்து குடிமக்களும் நினைக்க அண்டா முழுவதும் தண்ணீர் மட்டுமே இருந்ததாம்.
புதிய கதை….குடியாட்சியில் இன்று!!
————————————————————-
தேர்தல் என்னும் திறந்த பாத்திரத்தில் வாக்குகள் என்னும் பாலை வார்க்க பாரத மாதா அழைத்தாள். பலரும் சோம்பலிலோ அலட்சியத்திலோ அழைப்பை புறக்கணித்தனர். உடனே தீயவர் பலரும் கிளம்பி வந்து அந்தப் பால் பாத்திரத்தில் கள்ள ஓட்டு என்னும் கள்ளையும் காசுக்கு வாங்கிய ஓட்டு என்னும் சாராயத்தையும் குவளை குவளையாய் கவிழ்த்துப் போனார்கள்.அலட்சியம் காட்டிய வாக்காளர்களுக்குத் தெரியாது…அந்த கலப்பட பானம்தான் அவர்களின் குழந்தைகளுக்கு விநியோகிக்கப்படும் என்று!!
வாக்களிக்க மனமில்லை !மாற்றம்வர வழியில்லை!
————————————————————————————-
நாடு மாற வேண்டும், நன்மை சேர வேண்டும் என நான்கரை ஆண்டுகள், முக்கி முக்கி முனகி விட்டோம்.முகநூல் முழுக்க எழுதிவிட்டோம்.வெண்ணெய் திரளும் நேரம்..தாழியை உடைக்கலாமா? தேர்தல் வருகிற நேரம்..தள்ளி நிற்கலாமா?
வாக்குரிமை உள்ள ஒவ்வொருவரும் வாக்களிப்போம்.. ஜனநாயகத்திற்கு வாழ்வளிப்போம்.
முதல் காதல் போல..முதல் தேர்தல்!
————————————————————
முதன்முதலாய் வாக்களிக்கப்போகும் இளம் வாக்காளர்கள் ஆரோக்கியமான மாற்றத்தை ஆரம்பித்து வைக்கப் போகிறார்கள்.முதல் காதல் போல முதல் தேர்தலும் முக்கியம் என்பதை இந்த தேசத்தின் இளம் பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் நினைவூட்டுவது நம் கடமை. விருப்பு வெறுப்பின்றி, நாட்டின் நலனை மட்டும் நெஞ்சில் நிறுத்தி உங்கள் விரல்கள் அழுத்தும் பொத்தான்..விதியை மாற்றப் போகிறது.வாக்குச் சாவடிகளின் வாசல்களில் நின்று,பாரதியின் வரிகளை பாரதமாதா பாடுகிறாள்….
” இளைய பாரதத்தினாய் வா…வா…வா.. எதிரிலா வலத்தினாய் வா..வா..வா…”
விரலில் படியும் மைக்கோலம்!உரிமைக் குரலின் அடையாளம்!
——————————————————————————————————–
வாக்களிக்க மறுப்பவர்கள் இரண்டு வகை.”நம் வாக்கிலா நாடு திருந்தப் போகிறது” என்கிற விரக்தி மனப்பான்மையுள்ளவர்கள். வரிசையில் நின்று அட்டையைக் காட்டி விரலை நீட்டி.. இதெல்லாம் தேவையா?” என்னும் விட்டேத்தி மனப்பான்மை உள்ளவர்கள்.
இவர்களுக்கொரு வார்த்தை. உங்களுக்கு கட்சி அரசியலில் ஈடுபாடு இல்லாமல் இருக்கலாம். நிர்வாக அரசியலில் நாட்டம் வேண்டும். ஓரிரு மணிநேரங்கள் வரிசையில் நின்று வாக்களிக்கும் போது உங்கள் உரிமையை நிலை நாட்டுகிறீர்கள். உங்களுக்கு உங்கள் மேல் ஒரு தனி மரியாதை வருகிறது. உங்களுக்கு எது வேண்டும் என்னும் தெளிவை மௌனமாகப் பிரகடனம் செய்கிறீர்கள்.
அன்று தொடங்கி நீங்கள் வாக்களித்தவரின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனிக்கிறீர்கள்.சுயநலம் மிக்க தலைவர்கள் கைகளில் நாடு கைப்பாவையாக இருக்கிறது என்னும் ஆதங்கம் உங்களுக்கு உண்டா? அப்படியானால் அவசியம் வாக்களியுங்கள் நிர்வாகத்தின் தலைமையை முடிவு செய்கிற உரிமை, ஆட்சியாளர்களை ஆட்டுவிக்கும் கண்ணுக்குத் தெரியாத கயிறு உங்கள் கைகளுக்கு வந்துவிட்டதை உணர்வீர்கள்.
தேர்தலின் நிறம் மாறட்டும்! தேசத்தின் நிலை மாறட்டும்!
——————————————————————————————
பொறுப்புள்ள குடிமக்கள் எந்த சமரசமும் இல்லாமல் தேர்தலில் பங்கெடுக்கிறார்கள் என்னும் தகவல்,கட்சிகளின் தலைமகளை எச்சரிக்கும்.மக்களின் விழிப்புண்ர்வு உருங்கிணைந்த சக்தியாய் ஒரே நேரத்தில் வெளிப்படும் வாய்ப்பே தேர்தல்.
ஆக்கபூர்வமான இந்த அணுகுண்டு சோதனை,ஜனநாயகத்தை சீர்குலைக்கும் சக்திகளின் அடித்தளத்தை அதிர வைக்கும். மக்களுக்கு அஞ்சும் மக்களாட்சியை மலர வைக்கும்.
தேர்தல் என்னும் உரிமைப் போராட்டம், மக்களை வாங்கும் சூதாட்டமாய் இருக்கும் நிலை மாற சுய மரியாதையுள்ள வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்கு வருவது ஒன்றே வழி.
விலைபோகும் வாக்குகள்!களவு போகும் ஜனநாயகம்!
————————————————————————————–
மக்களை காசுக்கு வாங்கலாம் என்னும் மனோபாவம் முளையிலேயே கிள்ளியிருக்க வேண்டிய முள். வளர விட்டதால் இன்று விசுவரூபம் எடுத்து நிற்கிறது.
நம்மிடம் லஞ்சம் வாங்கும் சில அதிகாரிகளைப் பற்றி புகார் கொடுக்கிறோம்.நமக்கு லஞ்சம் தரும் சில அரசியல்வாதிகளை என்ன செய்யப் போகிறோம்.
நம்முடைய வாக்குச் சீட்டு ,நம் துருப்புச் சீட்டு. இதை ஆங்கிலத்தில் டிரம்ப் கார்ட் என்கிறார்கள். நம்மில் பலர் அதனை கிரெடிட் கார்ட் போல் பயன்படுத்திவிடுகிறோம்.விளைவு?தற்காலிக மகிழ்ச்சி தரும் அந்த லஞ்சப் பணம், ஐந்தாண்டுகளுக்கு வட்டிமேல் வட்டி ஏறி, நம் வாழ்வாதரங்களில் கைவைத்து,அடிப்படை உரிமைகளைக்கூட வாய்திறந்து கேட்க முடியாமல் செய்து விடுகிறது .
சூதாட்டத்தில் பாஞ்சாலியைப் பணயம் வைத்ததை பாரதம் காட்டுகிறது. வாக்களிக்கப் பணம் வாங்குவது பாரததேசத்தையே சூதாட்டத்தில் பணயப் பொருளாக வைக்கும் அபாய ஆட்டம். மனிதர்களின் சின்னச் சின்ன பலவீனங்களில் முதலீடு செய்யும் மலினமான போக்கை மாற்ற முன்வாருங்கள்.நோட்டுக்காக ஓட்டு என்னும் நிலையை மாற்றி நாட்டுக்காக ஓட்டு என்னும் விழிப்புணர்வைப் பரப்புங்கள்.நமக்குக் காவல் நிற்கும் ஜனநாயகம் களவு போகாமல் காப்பாற்றுங்கள்.
வாக்களிக்கும் தேசமே வல்லரசு தேசம்!
—————————————————————-
தேசத்தின் வளர்ச்சியில் நாம் காட்டும் குறைந்த பட்ச அக்கறை, தேர்தலில் தவறாமல் வாக்களிப்பது.ஒருமித்த உணர்வின் வெளிப்பாடாய்,உரிமையைக் காக்கும் ஏற்பாடாய் தேர்தல் வருகிறது.மக்களின் ஒருமித்த உணர்வு தேர்தலில் எதிரொலிக்கும் போது வல்லரசுக்கான விதை விழுகிறது.தேர்தலில் வாக்களிக்கும் ஒவ்வொருவரும்
வல்லரசு தேசத்தை வடிமைக்கும் பணியில் பங்கேற்கிறார்கள்.விரல்நுனியில் விளையட்டும் மௌனப் புரட்சி! தேர்தலில் தெரியட்டும் மக்களின் எழுச்சி!
வாக்களிப்போம் வாருங்கள்