உள்ளே உதிப்பாள் எப்போதும்..

கடம்ப வனமாகிய மதுரை, அங்கே இசைக்கு அரசியாக ராஐ மாதங்கியாக அம்பிகை வீற்றிருக்கிறாள். இமயமலையில் அவள் மயிலாக இருக்கிறாள்.

குண்டலினி ஆற்றல் நம் மரபில் பாம்பாக உருவகப்படுத்தப்பட்டிருக்கிறது. குண்டலினி சீறி எழுந்தாள். அதை யார் கட்டுப்படுத்துவது? பாம்பு மயிலுக்குப் பயப்படும். நம்முடைய குண்டலினி ஆற்றலை நெறிப்படுத்துவதற்காக இமயமலையிலே அவள் மயிலாக இருக்கிறாள்.

இந்த உலகத்தில் அவளை வெயிலாகப் பார்க்கலாம். உதிக்கின்ற செங்கதிரல்லவா அவள். அதிகாலையிலே பொழுது புலர்கிறது என்றால் பராசக்தி தோன்றுகிறாள் என்று அர்த்தம். இந்தப் பிரபஞ்சம் முழுவதும் பரவுகிற வெயில் அவள்.

தாமரைப் பூவிலே அன்னப்பறவை போல் அவள் அமர்ந்திருக்கிறாள். நம்முடைய இதயமாகிய தாமரையில் அன்னப்பறவை மெல்ல வந்து அமர்வது போல் அமர்வாள். இருக்கிற ஏழு தாமரைகளாகிய ஆதார மலர்களில் அவள் அமர்ந்து சக்தி நிலை மேம்பட நல்வினை, தீவினை இரண்டையும் பிரிக்கிறாள். அதனால் அவள் அன்னமாக இருக்கிறாள்.

மதுக்கரை அருகில் திருமலையாம்பாளையம் என்ற கிராமத்தில் மாஸ்தி கவுண்டன்பதி என்று சிறிய ஊர் உள்ளது. அங்கு பாலரிஷி தவக்குடிலில், ஈச குண்டலினி சுவாமி என்று ஒரு தனியார் கோவில் இருக்கிறது. மிகவும் அற்புதமான திருக்கோவில். அம்பிகையின் வாகனம் அன்னப் பறவை. அந்த அன்னப்பறவை முன்னால் வந்து நிற்கிற பக்தர்களுடைய நல்வினை, தீவினையை இரண்டாகப் பிரித்துக் கொடுக்கிறது.

மதுரையில் அன்னமாக இருக்கிறாள், இமயமலையில் குயிலாக இருக்கிறாள். நம்முடைய சக்கரங்களிலே, ஆதாரங்களிலே அன்னப்பறவையாக அமர்ந்திருக்கிறாள். இமயமலை அரசன் சூட்டிய அணிகலன்களுக்கு அழகுதரும் அபிராம வல்லியே அவள்.

குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடைக் கோலஇயல்
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை வந்துதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில்கமத்தின் மீதன்னமாம்
கயிலாயருக்(கு) அன்று இமவான்அளித்த கனங்குழையே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *