அடுத்து சொல்லக்கூடிய பாடலையும் சேர்த்து 100 பாடல்களை நாம் சொன்னால் நமக்கு என்ன நேரும்?
நூறாவது பாடலில் ஒரு கும்பாபிஷேகத்தையே நிகழ்த்துகிறார் அபிராமிபட்டர். கும்பத்தில் தெய்வத்தை நாம் ஆவாஹனம் செய்கிறோம், அக்னி வளர்க்கிறோம், ஆகாயத்தில் இருக்கிற இறைவனை காற்று வழியாக அதிலே நிலைபெறச் செய்து இந்த பூமியிலே நிலை நிறுத்துவதற்குப் பெயர்தான் கும்பாபிஷேகம்.
இந்தப் பிரபஞ்சம் எவ்வளவு பெரிதோ அந்தப் பிரபஞ்சத்தில் இருக்கிற அத்தனையும் இந்தப் பிண்டத்தில் இருக்கிறது. இந்த உடலே ஒரு பிரபஞ்சம். இங்கே இருக்கிற தெய்வத்தை நமக்குள்ளேயே நிலைநிறுத்தி ஒரு கும்பாபிஷேகம் செய்த நிறைவை அந்தாதிப் பாராயணம் நமக்குத் தருகிறது.
வாக் தேவீ அவள், அவளுடைய நாமங்களை உச்சரிக்க காற்றின் வழியாக ஆகாயத்தில் இருக்கக் கூடிய அவளை எட்டுகிறது. நம்முடைய இதயம் என்பது இந்த நம் கண்களிலே நிரம்புகிற ஆனந்தக் கண்ணீர், அவள் நீராட்டுவதற்குரிய புனித நீராகிறது. நம்மிலிருந்து எழக்கூடிய அந்த குண்டலினி ஆற்றல் நெருப்பின் இருப்பு. இந்தப் பிண்டத்திற்குள்ளேயே ஆகாயம்,பூமி, காற்று, நீர், நெருப்பு எல்லாவற்றையும் உணர்ந்து சக்தி சொரூபமாக அம்பிகை வந்து நிலை கொள்வதற்கு இந்த அந்தாதி நமக்குத் துணை செய்கிறது, அதைத்தான் இந்த நிறைவுப் பாடலில் சொல்கிறார்.
கொன்றை மலர்களை அணிந்திருக்கிற சிவபெருமான் அம்பிகையை ஆரத் தழுவினார். அவர் அணிந்துள்ள அந்தக் கொன்றை மலர்கள் அம்பிகையின்திருமுலை களிலே மணக்கத் தொடங்கியது. கழை என்றால் மூங்கில், மூங்கிலுக்கு நிகரான அவளுடைய நீண்ட தோள்கள், விருப்பம் ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு வரக்கூடிய பாணங்கள். வேரி என்றால் தேன்.
காதலன் காதலியிடையே விருப்பத்தை ஏற்படுத்தக் கூடிய தேன் நிறைந்த மலர்களைக் கொண்ட பாணம். அம்பிகையின் சிரிப்பும் உழை என்றால் மான், மான் போன்ற அவளுடைய கண்களும் ஒருநாளைக்கு இருபத்து நான்கு மணி நேரமும் சதா சர்வகாலமும் அவர் மனதில் தோன்றிக் கொண்டே இருக்கின்றன.
குழையைத் தழுவிய கொன்றையந்தார்கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந்தோளும் கரும்புவில்லும்
விழையப் பொருதிறல் வேரியம்பாணமும் வெண்ணகையும்
உழையைப் பொருகண்ணும் நெஞ்சில்எப்போதும் உதிக்கின்றவே.
உதிக்கின்ற செங்கதிர் என்று தொடங்கிய அபிராமி அந்தாதி உதிக்கின்றவே என்று நிறைவு பெறுகிறது.