“வானில் ஒருவன் விதைவிதைத்தால்
வயலில் அதுவந்து முளைத்திடுமா?”
ஏனோ இப்படி ஒரு கேள்வி
எழுந்தது ஒருவன் மனதினிலே
ஞானி ஒருவர் முன்னிலையை
நாடிச் சென்றே அவன் கேட்டான்
தேனாய் சிரித்த பெரியவரோ
தெளிவாய்ச் சொன்னார். “முளைக்கும்” என்று
வீசிய விதைக்கு உரமிருந்தால்
வீசும் காற்றும் துணையிருந்தால்
ஓசையின்றி அந்த விதை
ஒரு வயல் தன்னைச் சேர்ந்துவிடும்
ஆசைப்படுவது என் உரிமை
அதற்கென உழைப்பது உன் கடமை
பேசும் வார்த்தைக்கு வலியுண்டு
பொலிவுடை சொற்களே பேசிடுவாய்
எண்ணம் சொல் செயல் மூன்றிலுமே
ஏற்படுகின்ற ஒத்திசைவு
மண்ணில் புதுமைகள் மலர்த்தி விடும்
முடியாத தெல்லாம் முடித்துவிடும்
விண்ணில் மட்டுமா? பாறையிலும்
விதைத்தாலும் அது முளைத்துவிடும்
கண்முன் சாதனை நிகழ்ந்துவிடும்
கனவுகள் நனவாய் மலர்ந்துவிடும்
ஆகையினாலே மானிடனே
அயர்வுகள் தயக்கம் அகற்றிடுக!
ஆகுமா எனும் கேள்வியினை
அடிவேரோடு களைந்திடுக
ஏகப்பட்டவை வாய்ப்புகளே
எண்ணி நடந்தால் எட்டிடலாம்
போகும் வழிகள் பலவுண்டு
பயணம் தொடர்ந்தால் ஜெயித்திடலாம்!