உள்ளங்கால்கள் வலித்தால் கூட
ஓய்வு கொள்ள நேரமில்லை
வெள்ளம் போலக் கனவுகள் வந்தும்
வடிகால் மறந்தால் வாழ்க்கையில்லை
முள்ளும் மலரும் நிறைந்தது பாதை
மயங்கி நின்றால் பயணமில்லை
தள்ளிப் போட்டால் தேங்கிப் போகும்
தொடர்ந்து முயன்றால் தோல்வியில்லை
முடியா தென்னும் முனகல் குரலை
முளைக்கும் போதே நசுக்கிவிடு
கிடையாதென்றவை கிடைக்கும் இந்த
கணக்கின் சூட்சுமம் கையிலெடு
தடையாய் தெரிந்த தயக்கம் எல்லாம்
தொட்டால் நொறுங்கும் தெளிந்துவிடு
நடையாய் நடந்தோ கிடையாய் கிடந்தோ
நாலும் இங்கே நிகழ்த்திவிடு
தன்னால் விடியும் என்றே இருப்போர்
தாமாய் எதையும் செய்வதில்லை
மின்னல் இடியை வானம் மறுத்தால்
மழையும் இங்கே வருவதில்லை
பின்னால் வாழ்க்கை பொன்னால் அமைய
புழுதியில் இறங்கத் தயங்காதே
“என்னால் முடியும்” என்னும் எண்ணம்
எந்த நேரமும் மறவாதே