நேர்க்கோடுகளாய் நிமிர்ந்த வாழ்க்கையை
யாரோ வளைத்தால் அது அகங்காரம்!
நீயாய் வளைத்தால் அது அலங்காரம்!
வளைந்து கிடந்த வில்லை இராமன்
நிமிர்த்த முயன்றான் அதுவரை நியாயம்.
ஒடித்தான்: என்செய்? அவன் அவதாரம்!!
வளைந்து கிடக்கும் கேள்விக்குறியை
நிமிர்ந்து நிற்கும் வியப்புக் குறியாய்
நிகழ்த்திக் காட்டுதல் நல்ல அதிசயம்
வாழ்வில் அதுதான் வெற்றி ரகசியம்.
அரைக்காற்புள்ளியோ அடுத்தது என்ன
என்கிறதயக்கத்தை எடுத்துக் காட்டும்
தொடர்ப் புள்ளியாகி தொலைந்ததை மீட்கும்
நிறுத்தற்குறிகளால் நிகழும் வாழ்க்கையில்
வருத்தத்தைக் கழித்தால் வெளிச்சம் பெருகும்
வெள்ளைத் தாளாய் தொடங்கிய வாழ்வில்
வெற்றிக் காவியம் வரைந்திட முடியும்