வெண்முகிலில் ஊஞ்சலிடும் வெண்ணிலவின் தோற்றம்
வீணையடு வாணிதரும் வாஞ்சையே‘முன்’ னேற்றம்
பண்ணழகில் பரதமெனும் பேரழகில் நாட்டும்
பாரதியாள் பேரருளைப் பாடும்தமிழ் காட்டும்
பூங்கரத்தில் ஜெபமாலை, புத்தெழுத்துச் சுவடி
பொற்கரங்கள் வீணையினை பேரருளாய் வருடி
ஓங்காரப் பேருருவாய் ஒய்யார அழகி
ஓடோடி! வருவாள்என் உயிரோடு பழகி
பூசையிடும் வேளையிலே புன்னகைப்பாள் தேவி
பூங்குயிலின் குரல்வழியே புதுமொழியில் கூவி
ஆசையில் நடனத்திலும் அவளிருப்பாள் மேவி
ஆயகலை அத்தனையும் அவள்குளிக்கும் வாவி
அண்டமெல்லாம் படைப்பவனே அவளுடைய கணவன்
ஆக்கங்கள் அவள் நிகழ்த்த நகலெடுக்கும் துணைவன்
விண்டிலாத உண்மைகளை விரித்துரைப்பாள் அன்னை
விரல்நுனியில் தமிழாகி வாழவைப்பாள் என்னை