நானொரு வழிப்போக்கன்- ஆமாம்!
நானொரு வழிப்போக்கன்
வாழ்வின் நீண்ட வெளிகளை எனது
பாதங்கள் அளந்து வரும்
பாதையில் மாறிடும் பருவங்களால் ஒரு
பக்குவம் கனிந்து வரும்.
பக்குவம் கனிந்து வருவதனால் ஒரு
இலட்சியம் பிறந்து விடும்!
இலட்சியம் பிறந்த காரணத்தால் – இனி
நிச்சயம் விடிந்து விடும்!
யாதும் ஊரே என்றொரு புலவன்
பாடிய மொழி கேட்டேன்.
சாதனை யூருக்குப் போவது எப்படி?
அவனிடம் வழி கேட்டேன்-!
தீதும் நன்மையும் நாமே புரிவது
தெரிந்தால் நலமென்றான்.
நீதான் உனக்கு நண்பனும் பகைவனும்
புரிந்தால் சுகமென்றான்!
நீங்களும் நானும் போக நினைத்து
நிற்பது எந்த வழி?
ஓங்கிய ஆற்றல் வாய்ந்தவர் யாவரும்
வந்தது அந்த வழி!
போகிற வழியில் சந்தித்துக் கொள்கிற
பயணிகள் நாமெல்லாம்!
ஆவது ஆகட்டும்! இலட்சியம் நோக்கி
நடப்போம் நாளெல்லாம்!
நானொரு வழிப்போக்கன் -ஆமாம்!
நானொரு வழிப்போக்கன்.