வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
வாழ்க்கை ஒரு போராட்டம் என்று சிலர் வருத்தம் தோய்ந்த அறிக்கைகளை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள். போராட்டத்தின் ருசி தெரிந்தவர்கள், வாழ்வின் சவால்களை விருப்பமுடன் எதிர் கொள்கிறார்கள்.
சாமார்த்தியம் உள்ள மனிதர்கள் சதுரங்க விளையாட்டில் அமரும்போது பார்ப்பவர்களுக்கும் பரபரப்பு, விளையாடுபவர்களுக்கும் விறுவிறுப்பு. வாழ்க்கைகூட ஒவ்வொரு விடியலிலும் உங்களை விளையாட அழைக்கிறது.
அந்த அழைப்பை விளையாட்டாய் எடுத்துக்கொள்ளாமல் விருப்பமுடன் எதிர் கொண்டால் வாழ்வின் சுவாரசியத்தை சுவைத்தவர்கள் ஆவீர்கள்.
களம் எத்தனை கடிதாய் இருந்தாலும் கையில் இருக்கும் கருவியைக் கையாளத் தெரிந்தவனுக்குக் கவலையில்லை.
வாழ்க்கை முன்வைக்கும் ஒவ்வொரு போராட்டங்களும் உங்களை முன்னைவிட இன்னும் வலிமையாய் செதுக்கித்தரப் போகிறது. வா-ழ்வின் போராட்டங்களை விரும்பி எதிர் கொள்ளுங்கள். அவை, சுகமானவை.