வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
எல்லோருக்குத்தான் உத்தியோகம் இருக்கிறது. ஆனால், உத்தியோகத்தில் கூட “உத்தி”யோகம் இருப்பவர்கள் உருப்படலாம்.
உள்ளே தோன்றும் உத்திகள் உயர்ந்ததாய் இருக்க, புத்தியில் எப்போதும் புத்துணர்வு வேண்டும். அதுவொன்றும் பிரம்ம சூத்திரம் இல்லை. உள்ளே இருக்கும் உற்சாகத்தில்தான் எல்லாம் இருக்கிறது.
ஒரு விஷயம் குறித்து எல்லோரும் குழம்பி நிற்கும்போது அத்தனை பேர் பார்க்கும் கோணங்களில் இருந்து தள்ளி நின்று பார்த்து, தகுந்ததைச் செய்தால், உங்கள் சாமத்தியம் அங்கே வெளிப்படுகிறது.
எதையும் புதுமையாய் செய்ய வேண்டும் என்று விரதம் எடுப்பதாலோ வீம்பு பிடிப்பதாலோ வேலைகள் நடப்பதில்லை. இயல்பாகவே அந்தத் தன்மையை வளர்த்துக் கொள்பவர்கள், சாதாரண வேளையில் இருந்தால்கூட அடையாளம் காணப்பட்டு சாதனை மனிதர்களாய் உயர்கிறார்கள்.
தனித்தன்மையை வெளிப்படுத்தினால் உங்கள் தகுதிக்கான இடத்தை நீங்கள் தீர்மானிக்கலாம்.
சீக்ரமேவ “உத்தி”யோகப் பிராப்தி ரஸ்து!