வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
கால்துகள் பட்டு கல்லை உயிர்ப்பித்தான் ராமன். பார்க்கும் கண்களில் பரிவிருந்தால், உயிரற்றபொருட்களிலும் உயிர்வரும்.
உங்கள் அலுவலகம் உயிரோட்டமாய் இருக்கிறதா என்று அடிக்கடி அளந்து பாருங்கள். ஆக்கபூர்வமான அதிர்வுகள் நிரம்பிட, மெல்லிய இசையால், நிறைய வெற்றிடங்களால் நறுமணப் புகையால், புதுப்பித்துக் கொண்டே இருங்கள்.
அலுவலகத்தில் நல்ல அதிர்வுகளை ஏற்படுத்த வழி, சோர்வில்லாமல் இருப்பது, ஒவ்வொருவரும் சோர்வின்றி பணிபுரியும் சூழ்நிலையைக் கொடுப்பது.
அலுவலகத்தில் இருக்கும் குப்பைத் தொட்டியைச் சுற்றி குப்பைகள் இருந்தால், உயிரோட்டமும் உற்சாகமும் குறைவதாக அர்த்தம். குப்பை உள்ளே விழுவதோடு குப்பைத் தொட்டியின் வயிறும் அடிக்கடி காலி செய்யப்பட்டால் உயிரோட்டம் பெருகுவதாக அர்த்தம்.
பதட்டம் குறைந்து, பக்குவம் நிறைந்து, சூழ்ச்சிகள் அழிந்து, சுமூகநிலை கனிந்து ஒருவருக்கொருவர் ஆதரவாய் இருக்கும் அலுவலகமே உயிர்ப்புள்ள அலுவலகம்.
மாலையில் பூட்டிவிட்டுப் போனபிறகும், உள்ளே நல்ல அதிர்வுகள் வேலைபார்த்துக் கொண்டே இருக்கும் விதமாய், உங்கள் அலுவலகத்தை வைத்திருங்கள்.