மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து…
சுற்றுச் சூழலில் நடப்பது பற்றி
கொஞ்சம் கூடக் கவலையில்லாமல்
மதுக்கடை வாசலில் மல்லாந்திருக்கும்
குடிகாரனைப் போல் வாய்பிளந்திருக்கும்
பெட்டியின் வயிற்றில் கொட்டை எழுத்தில்
“புகார்கள் மற்றும் ஆலோசனைகள்.”
அருகிலோர் அலுவலர் அரைத்தூக்கத்தில்.
என்ன எதிர்பார்க்கிறீர்கள் எம்மிடம்-?
எந்தப் புகாரும் இல்லையென்றில்லை
எழுதும் தரமாய் இல்லையெம் புகார்கள்
உங்களுக்குள்ள ஒரு நூறு வேலையில்
எங்கள் புகார்கள் எட்டணா பெறுமா?
குடிநீர் வரவில்லை; குழாய் இணைப்புக்காய்
மடியைத் தோண்டிய மண்ணில் பள்ளம்;
வெய்யில் கொளுத்தும் வேளையிலெல்லாம்
மின்சாரத்தின் மர்ம மயக்கம்.
ரேஷன் கடையின் அரிசிமூட்டையே
புழு பூச்சிகளின் புகலிடமானது.
கோதுமைக்குள்ளே கொடிய நாற்றம்.
சர்க்கரையிலோ சரிபாதி கலப்படம்;
சில்லறை புகார்கள் உள்ளன இப்படி;
சொல்லிக் கொண்டே போகலாம்தான்-
சலிப்பால் நீங்கள் சோம்பல் முறித்து
முகம் சுளிப்பீர்கள் என்பதால் நிறுத்தினேன்.
புகார்கள் சொல்லப் பிரியமில்லை.
ஆனால் நண்பரே, உம்மிடம் சொல்ல
ஆலோசனைகள் உள்ளன எம்மிடம்.
கண்துடைப்புக்காய் இங்கே இருக்கும்
இந்தப் பெட்டியை அகற்றலாமென்று…
இந்த வேலைக்கு இத்தனை லஞ்சம்
எழுதிக் கூட மாட்டலாமென்று…
மலையாய்க் குவிந்து கிடக்கும் மனுக்களின்
புழுதியையாவது தட்டலாமென்று…
அகவிலைப்படி இத்தியாதிகளில்
உறக்கப் படியும் சேர்க்கலாமென்று…
இப்படி வாழ்வை நடத்துவதை விடப்
பிச்சை எடுக்கப் போகலாமென்று…
உயர்திணை, அஃறிணை இரண்டுக்கும் நடுவே
புதிய உயிராய்ப் பெயர் கொள்ளலாமென்று…
இந்தக் கவிதை படித்ததும் வருகிற
வேகத்தை வேலையில் காட்டலாமென்று…