உடைந்து போன உன் கனவுகளெல்லாம்
சில்லுகளாக சிதறிக் கிடக்கும்
தகவல் தெரிந்துதான் வந்திருக்கிறேன்.
ரணமாய் உறுத்தும் ரகசிய வலிகளைக்
காட்டிவிடுகிற கண்கள் உனக்கு.
பத்திய உணவு பிடிக்காத குழந்தையாய்
அழுகையை அழுத்தும் உதடுகள் மீது
இருத்தி வைக்கிற புன்னகை கூட
வருத்தத்தைத்தான் வெளிச் சொல்கிறது.
பளபளக்கின்ற கண்ணீர்த் திவலையை
படபடக்கின்ற இமைகள் மறைக்க,
சிலந்தி வலையில் சிக்கிய ஈசலாய்
துயரக் குளிரில் துடிக்குமுன் நாசிகள்.
சரிந்து விழுகிற மணல் வீடென்பது
சமுத்திரக் கரையில் சகஜமென்றாலும்
சிரமப்பட்டுக் கட்டிய பிள்ளைக்கு
சமாதானங்கள் சொல்லவா முடியும்?
தயக்கத்தோடு நான் தொட்டு நிமிர்த்தினால்
விசும்பல்களுடன் நீ வெடித்துச் சிதறலாம்.
பாரம் முழுவதும் இறங்க இறங்க… நீ
ஓயும் வரை என் தோள்களைத் தரலாம்.
நேரம் பார்த்து மெல்லிய குரலில்
தேறுதலாக ஏதும் சொல்லலாம்.
தொடங்கத் தெரியாத தர்மசங்கடத்தில் & என்
ஆறுதல் மொழிகள் காத்திருக்கின்றன…
ஆரம்பமாகாத உன் அழுகைக்காக!