சின்னப் பயணமாயிருந்தால்கூட
உன்னிடம் சொன்ன பிறகுதான் கிளம்புவேன்.
அரைமணி நேரந்தான் ஆகுமென்றாலும்
சொல்லியே ஆக வேண்டுமெனக்கு.
தெருமுனை வரைக்கும் போவதும், உனக்குத்
தெரியாமல் இதுவரை நிகழ்ந்தேயில்லை.
இருப்புப் பாதையாய் நீளுமென் வாழ்க்கையில்
பச்சை விளக்காய்ப் பரிணமிக்கிறாய் நீ.
பாதை முழுவதம், உன் புன்னகை என்னுடன்
கூட வருவதைக் கண்டிருக்கிறேன்.
உன்னிடம் சொன்னபின் தொடரும் பயணத்தில்
மலைகளைச் சுமப்பதும் மகிழ்ச்சியாயிருக்கும்.
சொல்லாமல் என்றேனும் கிளம்ப நேர்ந்தால்
இதயம் முழுவதும் கனமாயிருக்கும்.
தினசரி அலுவல்கள் தொடங்கவும், உனது
அனுமதி எனக்கு அவசியமாயிற்று.
எத்தனை சின்ன விஷயமென்றாலும், உன்
தலைசையப்புக்காகத் தவமிருக்கிறேன்.
எல்லாம் சரிதான் இதுவரை… ஆனால்
ஒரேயரு கேள்விதான் உறுத்தலாய் எனக்குள்.
சொல்லிக் கொண்டல்லவா கிளம்பவேண்டும்… என்
இறுதிப் பயணத்தின்போது எங்கிருப்பாய் நீ?