கப்பல் வருகிற திசையைப் பார்த்துக்
கண் விழித்திருக்கும் கலங்கரை விளக்கம்.
வெளிச்சக் கூக்குரல் வீசிவீசித்
திரைகடல் முழுவதும் தேடிப் பார்க்கும்.
தொலைந்துபோன பிள்ளையைத் தேடும்
தாயின் தவிப்பு அதிலே தெறிக்கும்.
நிதான கதியில் நகர்ந்து வருகிற
கப்பலைப் பார்த்தால் குதியாய் குதிக்கும்.
“இதோ பார்! இதோ பார்!” என்கிற தவிப்பு
கடலலை இரைச்சலில் கேட்டதோ? இல்லையோ-?
நிலத்தில் ஊன்றி நிற்கிற போதும்
நிலை கொள்ளாமல் நடுங்கிச் சிலிர்க்கும்.
கண்டு கொள்ளாமல் கப்பல் நகரும்.
தனது சுமைகளைத் தரையில் இறக்கத்
துறைமுகம் இருக்கும் திசையில் விரையும்.
பாதையில் வெளிச்சம் போட்டுக் கிடந்த
விளக்கில் அடடா வருத்தம் வழியும்.
இன்னொரு கப்பல் எதிர்ப்படுமென்று
கலங்கரை விளக்கம் காத்துக் கிடக்கும்.
கடற்கரைப் பக்கம் போகும்போது
கலங்கரை விளக்கைப் பார்க்க நேர்ந்தால்
பேச்சுத் துணையாய்ப் பக்கத்திலிருங்களேன்.