தவத்தின் உச்சியில் தோன்றிய கடவுளின்
முதுகுக்குப் பின்னால் ஒளிந்தான் தவசி.
சும்மா இருந்த கடவுளை இப்படி
வம்புக்கிழுத்தா வேடிக்கை பார்ப்பது?
கொணர்ந்த வரங்களை என்ன செய்வான் பாவம்!
திண்ணையில் வைக்க அனுமதிக்கலாம்தான்.
கல்லாய் இறுகிக் கிடக்கிற திண்ணை
பெண்ணாய் எழுந்தால் பொறுப்பேற்பவர் யார்?
வரந்தர வந்த கடவுளுக்கெதற்கு
அபலைப் பெண்ணின் சாபங்களெல்லாம்?
விழிக்கும் கடவுளின் முதுகுப் பின்னே
சிரிப்பை அடக்கத் தவிக்கிறான் தவசி.
‘அக்மார்க்’ முத்திரை அற்ற வரங்களை
இக்காலங்களில் யார்தான் வாங்குவார்?
ஆயுள் விருத்தி லேகியம் என்று
நாட்டு மருந்துக் கடைகளில் வைக்கலாம்.
வாங்கிப் பார்த்த வைத்தியரய்யா
காலாவதியாய் ஆகிற தேதி
குறிப்பிடப்படாததால் திருப்பிக் கொடுத்தார்.
கடவுள்பால் மிகவும் கருணை கொண்டு
புதுவருடத்துக் காலண்டர் பத்தை
கைக்கொன்றாகக் கொத்தனுப்பினார்.
(காட்சி தருகிற கடவுள் ஒன்றும்
காலண்டர் கடவுள்போல் அழகாயில்லை)
அரக்கப் பரக்க விழித்த கடவுள்
தெருமுனை தாண்டி நடப்பதைப் பார்த்தேன்.
நட்ட நடுநிசி கடந்ததன் பின்னால்
தேநீர் குடிக்கப் போனபோது…
அரசுத் தொட்டிலில் அத்தனை வரங்களும்
அனாதைகளாக அழுது கொண்டிருந்தன.
(இதற்கு முன்னால் இறைவனாயிருந்தேன்! – நூலிலிருந்து)