வழியெங்கும் பூத்தூவ
கானமொன்று தென்றலிலே
கலந்து வரும் நேரத்தில்
ஆனவரை சுற்றிவிட்டு
அடிவாங்கி அழுதுவந்த
ஊனமுற்ற சிற்றாடு
உன்கரத்தில் பத்திரமாய்;
மேய்ப்பனது கோல்தாண்டி
முறைகெட்டுத் தான் நடந்தால்
ஊர்ப்புறத்தில் ஓநாய்கள்
உறுமிவரும்; இதைமறந்து
வாய்ப்புள்ள வரப்பென்று
வெறும் முள்ளில் வாய்வைத்து
ஏற்பட்ட புண்ணுடனே
இப்போது திரும்பியது
கைகொள்ள மாட்டாமல்
கருணையுடன் ஏந்துகிறாய்
பொய்யச்சம் நீங்கும்படி
பச்சிலைகள் ஊட்டுகிறாய்
வையகமே கைவிட்டு
வந்துவிழும் உயிர்களையும்
மெய்யுருகக் கைகுவித்து
மதிப்பளித்து மாற்றுகிறாய்
பேசாத மௌனத்தில்
பொதிந்திருக்கும் அனுபவமே
வீசாத தென்றலையும்
வருவிக்கும் அற்புதமே
பாசாங்கே இல்லாத
பரிவுணர்வின் பெட்டகமே
ஈஷாவின் அருள்மழையே
இணையடிகள் வணங்குகிறோம்