“சோர்வு” என்பது பெரிய விஷயம் என்றுதான் பலரும் நினைக்கிறோம். அதில் ஒரே எழுத்து மாறினால்போதும். “தீர்வு” பிறந்துவிடும்.
“மனம் சோர்வடையத் தொடங்குகிறதா? எழுந்திருங்கள்! ஒரே இடத்தில் உட்காராதீர்கள்! நகருங்கள்! நகருங்கள்!” என்று உந்தித் தள்ளுகிறார்கள் உளவியல் நிபுணர்கள். எங்கும் செல்லாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பவர்களை மலைப்பாம்பு மாதிரி சுற்றிக்கொள்கிறதாம் மனச்சோர்வு! ஒரே அறைக்குள் அடைந்துகிடக்கும்போது இருதயத் துடிப்பு குறைகிறது. மூளைக்கும் பிராண வாயுவின் ஓட்டம் குறைகிறது. நுரையீரலுக்கு நல்ல காற்று வந்து சேர்வதும் தடைப்படுகிறது.
கொஞ்சம் சோர்வு வருகிறபோதே, காரணமிருக்கிறதோ இல்லையோ, பரபரப்பாக நடைபழகி வருவது நல்லதென்கிறார்கள்.
நம்மில் பலருக்கு இயற்கையோடு செலவிட நேரம் இருப்பதில்லை. நம்மைவிடப் பல மடங்கு பிரம்மாண்டமானது இயற்கை. அத்தகைய இயற்கைச் சூழலில் உலவுகிற நேரங்களில் எல்லாம் உள்ளத்தில் உற்சாகத்தின் ஊற்றுக்கண் திறந்து கொள்கிறது.
மலைவாச ஸ்தலங்களுக்கோ, இயற்கையின் ஆளுமை நிறைந்த இடங்களுக்கோ சென்றுவர, விடுமுறைக் காலம் பயன்படவேண்டும்.
அடுத்ததாக, நமக்கு எவ்வளவு நண்பர்ள் இருக்கிறார்கள் என்கிற எண்ணிக்கை முக்கியமில்லை. எண்ணிக்கை குறைவாக இருந்தாலும்கூட, நெருக்கமான – நம்பகமான நண்பர்கள் இருக்கிறார்களா என்பதே முக்கியம்.
அவர்களோடு மனம்விட்டுப் பேசி, வாய்விட்டுச் சிரிக்கும்போது சோர்வு நம்மை விட்டு நீங்குகிறது. சிரிப்பின்போது சத்தம் மட்டுமா வருகிறது? இருதயத்துக்கும் மூளைக்கும் ரத்தம் பாய்கிறது. தசைகளின் இறுக்கம் குறைகிறது. மனதுக்குள் உற்சாகம் மலர்கிறது.
மனச்சோர்வு அகல இன்னொரு வழியும் இருக்கிறது. “உனக்கும் கீழே உள்ளவர் கோடி! நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு” என்றார் கவியரசு கண்ணதாசன். நமக்கும் கீழே இருப்பவர்களை நினைத்துப் பார்ப்பதில் மட்டுமே மனச்சோர்வு அகல்வதில்லை. அவர்களுக்கு உதவி செய்யும்போது, நம்முடைய வாழ்க்கை அர்த்தமுள்ளதுதான் என்கிற எண்ணம் பிறக்கிறது. அதாவது, மற்றவர்களுக்கு உதவுவதன் மூலமாக நமக்கு நாமே உதவிக் கொள்கிறோம் என்பதுதான் உண்மை.
புழக்கத்தில் இருக்கிற பாத்திரம் பளபளப்பாக இருக்கும். மற்றவர்களுக்கப் பயன்படுகிற வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உடலுக்க ஏற்படுகிற நோய்களைத் தீர்க்க மற்றவர்கள் உதவியை மருத்துவர்கள் சிகிச்சையை நாடிப் போகலாம்.
ஆனால், மனதுக்கு ஏற்படுகிற சோர்வை நாமாகவே நீக்கிக் கொள்வது நல்லது. மனதின் ஆரோக்கியம் அதிலேதான் உள்ளது.
மரபின் மைந்தன் ம.முத்தையா
வெற்றிச் சிறகுகள் விரியட்டும் நூலிலிருந்து…