கவிஞர்கள் கவியன்பன் பாபு, மீனாட்சிசுந்தரம் ஆகியோர் இணைந்து வடித்த “ஊரிசையில் நேரிசை” நூலுக்கு கவிஞர் புவியரசு அவர்கள் வழங்கிய வாழ்த்து மடல் சார்ந்த விவாதங்கள் இன்று இரு முனைகளில் மையம் கொண்டுள்ளன. ஒன்று, புவியரசு அவர்களின் பாடல்கள் வெண்பா வடிவில் இருந்தாலும் தளை தட்டுகின்றன என்பதை மேற்குறித்த இரு கவிஞர்களும் தங்கள் எதிர்வினையில் சுட்டினர்.

அத்துடன் “தளைதட்டினாலென்? தலைதட்டினால் என்?” என்னும் வரி தங்கள் வெண்பாக்களில் தளைதட்டுவதாக சொல்கிறதோ என்றும் தாம் ஐயுறுவதாய் குறிப்பிட்டனர்.

இந்த விவாதத்தில் என்னை நான் இணைத்துக் கொண்டபோது , மரபுக் கவிதை வடிவம் பற்றி கவிஞர் புவியரசுக்கு நம்பிக்கையில்லை என்பதை முன்வைத்தேன். “மரபுக் கவிதை செத்து விட்டது” என்று கவிஞர் புவியரசு சொன்னார் என்பதைப் போலவே அதை அவர் எங்கு சொன்னார் என்பதும் முக்கியம்.

ராமலிங்கர் பணிமன்றம் சார்பில் நிகழ்ந்து வரும் கலை இலக்கியப் போட்டிகளில் மாநில அளவில் கடந்த மூன்றாண்டுகளில் முதல் பத்து இடங்களைப் பிடித்த மாணவர்களுக்காக நிகழ்த்தப்படும் கவிதைப் பயிலரங்கில் மரபுக்கவிதை எழுத வழிகாட்டல் வேண்டி வகுப்பில் கேள்வி கேட்டார் ஒரு மாணவர். உடனே “மரபுக் கவிதை செத்துவிட்டது. அதை எழுதாதீர்கள்” என்று பகிரங்கமாக அறிவித்தார். கவிஞர் சிற்பி உள்ளிட்ட பலரும் அதில் தங்களுக்கிருக்கும் அதிருப்தியை வகுப்பு முடிந்தபின் வெளியிட்டனர்

எனவே இயல்பாகவே மரபின் மீது நம்பிக்கை இல்லாத ஒருவர் மரபுக்குள் நின்று பாடும் முயற்சியை “தளைதட்டினால் என்? தலை தட்டினால் என்?” என்று சொல்வதை இந்த விவாதத்தின் போக்கு சுட்டியது.

ஒருவர் சொல்லும் எண்ணத்தின் மீதான விமர்சனம் அவர் மீதான விமர்சனமாகாது.கவிஞர் புவியரசு மீதான நன்மதிப்பும் குறையாது.

இந்த விவாதத்தில் பங்கெடுக்கும் ஒவ்வொருவருக்குமே அவர் ஒவ்வொரு விதத்தில் நெருக்கமானவர். அது வேறு விஷயம்
கவிஞர் புவியரசு மூத்தவர்தான். அவரை விட மூத்தது இலக்கண மரபு.

இன்று பல்லாயிரக்கணக்கான மரபுக் கவிஞர்கள் ஒளிவீசும் உலகில் மரபுக் கவிதை வடிவம் செத்து விட்டது என்று எழுதத் துடிக்கும் இளைஞர்களுக்கு தவறாகச் சொல்கிறாரே என்னும் ஆதங்கம் இந்த நேரத்தில் வெளிப்பட்டுவிட்டது என்பதே உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *