தன் பதிமூன்று வயது மகளுக்க மிதிவண்டி ஓட்டப் பழக்கிவிட்டுக் கொண்டிருந்தார் அவர். வயதுக்கு மிஞ்சிய உயரம். கால்களுக்குப் பெடல் எஞ்சியும் எட்டாமலும் இருந்ததில் அவ்வவ்போது தடுமாற்றம். சைக்கள் சற்றே சாய்கிற போதெல்லாம், “அப்பா, விட்டுடாதீங்கப்பா” என்று அலறுவாள் மகள்.

“விட மாட்டேன்! தைரியமா ஓட்டு” சைக்கிளைப் பிடித்துக்கொண்டே, கூட ஓடுவார் அவர். தினமும் காலையில் இந்தப் பயிற்சி நடக்கும். நாட்கள் நகர்ந்தன. “அப்பா! விட்டுடாதீங்கப்பா!” என்று அலறுவது குறைந்தது. அவ்வவ்போது மெல்லிய குரலில் சொல்வதோடு சரி.

தன் மகள் அப்படிச் சொல்கிறபோதெல்லாம் தனக்குள் சிரித்துக்கொள்வார் அவர். அந்தச் சிரிப்பில் இருப்பது மகிழ்ச்சியா? பெருமிதமா? சொல்லத் தெரியவில்லை.

அப்புறம் ஒரு நாள் வந்தது. அங்குமிங்கும் சாய்வது மாறி சமனப்பட்டது சைக்கிள். பாதங்களுக்கும் பெடல்களுக்கும் ஒத்திசைவு ஏற்பட்டது. ஓட்டுவதில் இருக்கிற லயம் ‘சட்’டென்று பிடிபட்டது மகளுக்கு. சைக்கிளைத் தாங்கிப் பிடித்துக்கொண்டே வந்த தந்தையிடம் சொன்னாள், “அப்பா! விட்டுடுங்கப்பா!”

அதிர்ந்துபோய்விட்டார் அவர். “அப்பா! விட்டுடாதீங்கப்பா!” என்கிற வரையில், தன்னைச் சார்ந்து தன் மகள் இருக்கிறாள் என்கிற பெருமிதம் “விட்டுடுங்கப்பா” என்கிற வார்த்தையில் தகர்ந்தது. அவருக்குள் ஏதோ ஒன்று உடைந்தது.

அவர் ஒன்றை மறந்துவிட்டார். எல்லாக் குழந்தைகளும் நடக்கப்பழகும். எல்லாக் குஞ்சுகளுக்கும் சிறகு முளைக்கும். தங்கள் குழந்தைகள் தங்கள் கால்களில் நிற்கத் துவங்குவதில் ஒரு சந்தோஷம் இருக்கிறது. தன் ஆளுகைக்குள் இருக்கத்தான் பிள்ளைகள் என்கிற எண்ணம், குழந்தைகளின் வளர்ச்சியை மட்டுமா தடுக்கிறது? குழந்தைகளுக்கு வளர்ச்சி வந்தால் அதைப் பார்த்துப் பெற்றவர்கள் அடைகிற மகிழ்ச்சியையும்தான் தடுக்கிறது.

ஒரு வயதுக்குப்பின்னால், பக்குவமும் பொறுப்புணர்வும் வந்த பின்னால், தங்கள் பாதையைத் தாங்களே தேர்ந்தெடுத்துக்கொள்வதில்தான் இளைய தலைமுறை ஆர்வம் காட்டுகிறது.

முந்தைய தலைமுறையின் எல்லைகளைக் கடந்து இன்றைய தலைமுறையின் பார்வையும், பரப்புகளும் தொடர்புகளும் விரிந்துகிடக்கின்றன.

எம்.பி-.ஏ. படித்து முடித்து வேலைக்கு விண்ணப்பித்திருந்தார் ஓர் இளைஞர். நேர்காணலின்போது, “களப்பணிக்குச் செல்கிறீர்களா?” என்று கேட்டார்கள். “இல்லை! அலுவலகத்திலேயே அமர்ந்து பார்க்கிற வேலை போதும்” என்றார் இளைஞர். ஏனென்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் விசித்திரமானது. “என் அப்பா அந்த வேலைக்குத்தான் போகச் சொன்னார்” என்றார் அவர்.

வருகிற வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள தந்தையே ஒரு தடைக்கல்லாக இருப்பது வருத்தத்திற்குரிய விஷயம் அல்லவா!

இவருக்கும், மகள் சுயமாக சைக்கிள் ஓட்டுவதை வருத்தத்துடன் பார்த்துக்கொண்டிருந்த தந்தைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

எதுவரைக்கும் பிடித்துக்கொண்டிருக்க வேண்டும். எப்போது விட்டுவிட வேண்டும் என்கிற தெளிவு இருவருக்கும் இல்லை.

வாழ்க்கையின் பரப்பு விரிந்து கிடக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வாய்ப்புகள் வாழ்க்கையில் காத்திருக்கின்றன. அதைத் தாமாகவே பயன்படுத்திக்கொள்ளும் சுதந்திரம் இளைஞர்களுக்கு வேண்டும்.

வேலைக்குப் போவது என்பது வேட்டைக்குப் போவதுபோல. ஆற்றலுக்குத் தக்கபடி ஆதாயம் கிடைக்கும். வருங்காலத்துக்குத் திட்டமிடுவது, விருப்பம் இருக்கும் துறையில் ஈடுபடுவது, வேண்டிய இடங்களில் வளைந்துகொடுப்பது, சூழ்நிலையைத் தனக்கு சாதகமாக்கிக் கொள்வது என்பதெல்லாம் வேலைக்குப் போகிற இடத்தில் வாய்ப்பவையே தவிர வீட்டில் சொல்லிக்கொடுத்து வருவதல்ல.

வளர்ந்த இளைஞர்களை விடுங்கள். குழந்தைகளைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அவை எப்படி நடக்கப் பழகுகின்றன? முதலில் தள்ளாட்டத்துடன் எழுந்து நின்று, நம் கைகளைப் பிடித்துக்கொண்டு, சுவர்களைப் பிடித்துக்கொண்டு, தாமாக முயற்சி செய்கின்றன. பலமுறை விழுந்து எழுந்து, தன்னையும் அறியாமல் தனிமையில் முயன்று தட்டுத் தடுமாறி நடை பழகுகின்றன. நாம் குழந்தைகளை நடக்கப் பழக்குகிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் நம் கண்காணிப்பில் அவை தாமாகவே நடக்கப் பழகுகின்றன.

ஒரு காலகட்டம் வரை நடை வண்டி தேவைப்படுகிறது குழந்தைகளுக்கு-. பிறகு அவற்¬ விட்டு விடுகின்றன. சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க பிள்ளைகளுக்கு உதவலாம்தான். ஆனால், அவர்களின் விரைவான பயணம் நம் விரல்களைப் பிடித்துக்கொண்டு நடக்க வேண்டுமென்று பிடிவாதம் பிடித்தால் எப்படி?

விட்டுவிடுங்கள்! அவர்கள் பயணம் அவர்களுக்கு!

மரபின் மைந்தன் ம.முத்தையா
வெற்றிச் சிறகுகள் விரியட்டும் நூலிலிருந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *