23244010_1357039424400319_3822092278242135570_n

குளிர் கொஞ்சும் கோபியிலே
கொடிவேரி அணையருகே
குடிகொள்ள அன்னை வந்தாள்;
ஒளிர்கின்ற கருமை நிறம்
உலகாளும் கருணை குணம்
ஓங்கிடவே அன்னை வந்தாள்;
களி கொஞ்சும் சிறுமூர்த்தி
கடலளவு பெருங்கீர்த்தி
கண்நிறையும் தேவி வந்தாள்;
பளிங்கனைய விழிமூன்றும்
பரிவெல்லாம் சிந்திடவே
பைரவியாள் கோவில் கொண்டாள்;

வாட்டமெல்லாம் தீர்ப்பதற்கே
வழிபார்த்து நிற்பதுபோல்
விளங்குகின்ற கோவில் நாடு;
கேட்டதற்கும் மேலாக
கோடிவரம் தருகிற
காலடிகள் தலையில் சூடு;
பாட்டினிலே இசையாகும்
பைரவியாள் சந்நிதியில்
போயமர்ந்து கண்கள் மூடு;
ஆட்டுவிக்கும் ஓங்காரி
ஆளுகையில் சரணடைந்து
ஆனந்தமாய் ஆடிப்பாடு;

நெஞ்சுருகும் பக்திக்கு
நெக்குருகும் பைரவியாள்
நல்லவழி காட்டிவிடுவாள்;
அஞ்சும்நிலை மாற்றிநல்ல
ஆறுதலைத் தந்திடுவாள்
ஆனவினை தீர்த்துவிடுவாள்;
கொஞ்சுகிற சிறுமழலை
கூன்விழுந்த பெருங்கிழவி
கண்நிறையும் கன்னிஅவளே;
தஞ்சமென வந்தவரைத்
தாங்குகிற பைரவியாள்
தளிரடிகள் போற்றிவாழ்வோம்!

– மரபின் மைந்தன் முத்தையா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *