உலகின் மிகச்சிறந்த விற்பனையாளர்கள் தங்களை விற்பனையாளர்கள் என்று கருதியே கிடையாது. ஏனெனில், தங்களிடம் விற்பதற்கு ஒன்றுமில்லை என்றே அவர்கள் கருதினார்கள். ஒரு பொருளுக்கான தேவை என்பது, வாடிக்கையாளர்களின் வாழ்வில் காணப்படும் ஓர் இடைவெளி. அந்த இடைவெளியை இட்டு நிரப்ப தரம் மிக்க பொருள் தம்மிடம் இருக்கிறது, அந்தத் தேவையை நிறைவேற்றும் சேவையே தனது வாழ்வின் இலட்சியம் என்று உறுதியாக நம்பியவர்கள், உலகின் உயர்ந்த விற்பனையாளர்கள் ஆனார்கள்.

சில அம்சங்களை தங்கள் இயல்பாகவே ஆக்கிக் கொள்ளும் போது வெற்றிப்படிகளில் விறுவிறுப்பாக ஏறி விடமுடியும் என்பதை நிதர்சனமாய் நிரூபித்தவர்கள் அவர்கள்.

உலக அளவில் மிகச்சிறந்த விற்பனையாளர்களாக விளங்கியவர்களுக்கென்று சில பொதுக்குணங்கள் இருந்து வருகின்றன. இந்தக் குணங்கள் சூழலுக்கேற்ப சின்னச் சின்ன மாற்றங்களைக் காணலாம். ஆனால் அடிப்படை ஒன்றுதான்.

தொடரும் தொடர்புகள்:

வாடிக்கையாளர்களுடன் தொடர்புகள் வைத்துக் கொள்ள பல வழிகள் உள்ளன. அவற்றில் தலைசிறந்த வழி, அவர்கள் நினைவில் நிற்பது. மறக்கமுடியாத வழிகளைக் கையாண்டு மனதில் இடம் பிடிப்பது. அவரவர் கற்பனைக்கேற்ப இந்த வழிகள் மாறுபடலாம். சுவாரசியமான குறுஞ்செய்திகள் தருவதில் தொடங்கி எத்தனை செய்தாலும், எல்லாவற்றையும்விட சிறந்தது, தரமிக்க பொருட்களையும் தலைசிறந்த சேவையையும் தருவதுதான். இதன்மூலம், அந்த வாடிக்கையாளருடன் தொடர்பு வலுப்பெறுவதோடு அவர் மூலம் புத்தம் புதிய தொடர்புகளை பெற முடிகிறது. தொடர்புகளைத் தக்க வைத்துக் கொள்வதும், புதிய தொடர்புகளை உருவாக்குவதும் வளர்ச்சிக்கு மிக முக்கியம்.

பற்றிக்கொள்ளும் உற்சாகம்:

விற்பனையாளர்கள் சிலர் வலிந்து ஏற்படுத்திக் கொள்ளும் செயற்கை உற்சாகம், மத்தாப்பு வெளிச்சம் போல் மிகக்குறைந்த நேரமே இருக்கும். ஆனால் உற்சாகம் என்பது உள்நிலை இயல்பாகவே மாறும்போது யாருடன் நீங்கள் பழகினாலும் அவர்களையும் அது தொற்றிக்கொள்ளும். ஒரு பொருளை விற்பனை செய்ததில் உங்களுக்கு உற்சாகம் இருந்தால் போதாது. அந்தப் பொருளை வாங்கியதன்மூலம், தங்கள் வாழ்விலும் ஒரு புதிய வெளிச்சம் பூத்திருப்பதாக வாடிக்கையாளர்களை நினைக்க வைக்க முடிகிறதா? அப்படியானால் உங்கள் உற்சாகத்தை அவர்களுடன் பங்கிட்டுக் கொண்டதாகப் பொருள். குறிப்பிட்ட சந்திப்பில் நீங்கள் உங்கள் பொருளை விற்பனை செய்தாலும் சரி, செய்யாமலிருந்தாலும் சரி. ஆனால் உங்களைச் சந்திப்பதன் மூலம் சிலர் உற்சாகம் பெறுகிறார்கள் என்றால், உண்மையில் அதுவே வெற்றி.

அணுகுமுறை:

விற்பனைத்துறையில் இருக்கும் அத்தனை பேருமே அந்தத்துறை மீது அளவில்லாத நேசத்துடன் தொடங்கியதில்லை. ஆனால் அந்தத் துறையில் இறங்கிய பிறகாவது அதன் மேல் மிகுந்த விருப்பத்தை வளர்த்துக் கொள்பவர்கள் வெற்றியாளர்களாக வலம் வருகிறார்கள். வெளிச்சூழ்நிலை சரியில்லை, மக்களிடம் பணமில்லை என்பது போன்ற காரணங்களைத் தேடிக் கொண்டிருப்பவர்கள், காரியங்களைக் கைவிட்டு விடுகிறார்கள். எல்லோருக்கும் சில விஷயங்கள் சௌகரியமாக இருக்கும். ஆனால் அந்த வசதி வட்டத்தை விட்டு வெளியே வந்தவர்களுக்கு வாழ்வின் எல்லா நிலைகளுமே வசதியாகத் தான் இருக்கும். அளப்பரிய சாதனை எதிலிருக்கிறது தெரியுமா? அணுகுமுறையில் இருக்கிறது.

துணிச்சல்:

விற்பனையாளராக இருப்பது என்பது வாடிக்கையாளர்களை எதிர்கொள்வது மட்டுமல்ல. வாழ்க்கையை எதிர் கொள்வது. ஏற்ற இறக்கங்களைத் தாண்டி, எதிலும் வெற்றி கொள்வது, ஒரு நாளில் முதலில் பார்த்த நான்கு வாடிக்கையாளர்களிடம் பொருளை விற்பனை செய்ய முடியாவிட்டாலும் ஐந்தாவது வாடிக்கையாளரை சந்திப்பது போன்ற மலர்ச்சியும் எழுச்சியும் இருந்தால் நீங்கள் வெற்றிகரமான விற்பனையாளர் என்று பொருள்.

உடுப்புப்பிடி:

விடாமுயற்சியை விடாமல் பற்றுபவர்களே வெற்றியாளர்கள். நிராகரிக்கப்படுவோமோ என்ற அச்சமோ, நிராகரிக்கப்படுகையில் ஏற்படும் விரக்தியோ இல்லாமல் ஒவ்வொரு முறையும் உற்சாகமாக வெளிப்படுவதே முக்கியம். தங்கள் பாதையிலும் பயணத்திலும் உறுதியும் நம்பிக்கையும் கொண்டவர்களின் முயற்சி முனைமுறியாமல் இருக்கும். வெற்றி நோக்கிய பயணம், ஒரு பயணம் மட்டுமா? இல்லை-பந்தயமும் தான். அதே நேரம், வெற்றி நோக்கிய ஓட்டம் என்பது பந்தயம் மட்டுமா. இல்லை!பயணமும்தான்!

வாழ்க்கைப்பயணமே ஒரு பந்தயமாய் அமையும் சவால் மிக்க வாழ்க்கை, விற்பனையாளர்களின் வாழ்க்கை. அதில் விருப்பத்துடன் ஈடுபடுவர்களுக்கே வெற்றிக்கோப்பை.

(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய மார்க்கெட்டிங் மந்திரங்கள் என்னும் புத்தகத்தில் இருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *