நமது வீட்டின் முகவரி – 5
பட்டப்படிப்பு முடிந்தவுடனே வேலை தேடும் படலம். இது கடந்த காலம். குறிப்பிட்ட கல்விப் பிரிவுகளில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கும் பருவத்திலேயே, “கை நிறையச் சம்பளம்” என்கிற கனவை நனவாக்கும், “கேம்பஸ் இண்டர்வியூ”க்களின் காலம் இந்தக் காலம். உள்ளம் நிறைய உறுதி, முனை மழுங்காத முனைப்பு, இலக்கை எட்டுவதில் தீவிரம் போன்ற குணங்களுடன், கல்வி வாழ்க்கையை ஒரு சவாலாக மேற்கொள்ளும் யாரும் தோற்றுப்போக முடியாது. தனியார் நிறுவனங்களின்மூலம் இந்த தேசத்திற்கு ஏற்பட்டிருக்கிற நன்மை, பணி வாய்ப்பு என்பது பரிந்துரைகளின் அடிப்படையில் இல்லாமல் தகுதிகளின் அடிப்படையில் தரப்படுவதுதான்.
இன்றைய உலகத்தில், தகுதிகள் மட்டுமே தலையெடுக்கும் என்பதால், “கற்றதில் தெளிவு” என்பது கட்டாயப் பாடம் ஆகிவிட்டது.
இந்தத் தீவிரமான சூழலுக்கு ஈடுகொடுக்கும் இளைஞர்கள் எழுந்து நிற்கிறார்கள். மற்றவர்கள் துவண்டு விழுகிறார்கள். தன்னைத் தானே கூர்மை செய்துகொள்வது தன்னுடைய கையில்தான் என்பதைப் புரிந்து கொள்கிறவர்கள் புத்திசாலிகள். ஏனெனில் அது மிகவும் எளிய வழி.
போர்வீரன், தன் கைவசமிருக்கும் ஆயுதங்களைக் கையாள்வதில் கவனமாயிருப்பது மாதிரி, மாணவர்கள் தங்கள் தகுதியைத் தாங்களே எடை போட்டுக் கொள்ள வேண்டும். அதற்கேற்ற துறையில் சேர்ந்து அறிவை ஆழப்படுத்தி, வருகிற வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சில கேம்பஸ் இண்டர்வியூக்களில், இரண்டு, மூன்று நல்ல நிறுவனங்களில் தேர்வு செய்யப்பட்டு, எதில் சேர்வது என்கிற சந்தோஷக் குழப்பத்தில் இருக்கும் இளைஞர்களே ஏராளம். அப்படிப் பல நிறுவனங்களால் விரும்பப்படுவது ஜாதகத்தின் பலனல்ல. சாதகமான விஷயங்களைப் பலமாக்கிக் கொண்டதன் பலன்.
எனவே, கல்வியின் மைல்கல்லைக் கடக்கும் பருவத்தில், வாழ்க்கை பற்றிய நம்பிக்கையை வளர்த்துக்கொள்வது முக்கியம். இந்தக் காலத்திலே வேலை உடனே கிடைக்குமா?” என்று யாராவது கேட்டால், “அதெல்லாம் உங்க காலத்திலே” என்று அடித்துச் சொல்கிற அழுத்தமான நம்பிக்கையின் வார்ப்புகளாய் உருவாகுங்கள்.
“எங்கேங்க… நமக்காவது வேலை கிடைக்கறதாவது” என்கிற எதிர்மறை மனோபாவத்தை எரிக்கும் சக்தி அறிவின் சுடருக்கே உண்டு. இளைஞனுக்கு தன்னைக் குறித்த கம்பீரம் துளிர்விட வேண்டும். தன்னைக் குறித்த கம்பீரம் என்பது, தகுதியால் மட்டுமே வருவது. கல்வியைப் பொறுத்தவரை ஒருவன் தன்னைத்தானே தகுதிப்படுத்திக் கொள்வது சுலபமா? கடினமா? என்கிற கேள்வியைப் பலரும் கேட்கிறார்கள்.
கடின உழைப்பு இருந்தால் அது மிகவும் சுலபம் என்பதுதான் உண்மை. தளராத முயற்சியின் உயரம்தான் தகுதிக்கான உயரம். அது பிறர் கொடுத்து வருவதுமில்லை. பறிர் தடுத்துக் கெடுவதுமில்லை.
உல்லாசங்கள், கேளிக்கைகள் போன்றவை இளைஞனின் இயல்பாயிருந்தாலும், அதற்கான நேரம் – பகுதி நேரத்தின் ஒரு பகுதிதான். மற்ற நேரங்கள் தகுதிக்கான… தகுதியை மிகுதிப்படுத்துவதற்கான நேரங்கள்.
அதுசரி, “கேம்பஸ் இண்டர்வியூ” எனப்படும் கல்வி வளாக நேர்காணலுக்குத் தயாராவது எப்படி?
(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)