நமது வீட்டின் முகவரி – 6
புகழ்பெற்ற நிறுவனங்கள், பெயர் பெற்ற கல்லூரிகளைத் தேடிவந்து, இறுதியாண்டு மாணவர்களைத் தங்கள் நிறுவனத்திற்காகத் தேர்வு செய்வதன் பெயரே கல்வி வளாக நேர்காணல் என்னும் “கேம்பஸ் இண்டர்வியூ.”
நிர்வாகவியல் (எம்.பி.ஏ.), பொறியியல் போன்ற துறைகளில் இந்த முறை மிகவும் பிரபலம். செய்தித் தொடர்பியல் (மாஸ் கம்யூனிகேஷன்ஸ்) பிரிவிலும் சில கல்லூரிகளில் இத்தகைய தேர்வுகள் நடைபெறுகின்றன.
இறுதியாண்டில் இருக்கிற எல்லா மாணவர்களுமே கேம்பஸ் இண்டர்வியூவிற்கு அழைக்கப்படுவதில்லை. பெரும்பாலும் மூன்றுவிதமான படிநிலைகளில், நேர்காணலுக்குரிய மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். முதல் தகுதி மதிப்பெண். உதாரணமாக, அரியர்ஸ் இல்லாமல் எழுபத்தைந்து சதவிகிதத்துக்கும் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் அழைக்கப்படுவதுண்டு. அடுத்தது எழுத்துத்தேர்வு. மூன்றாவது படிநிலை குழு கலந்துரையாடல்.
அரியர்ஸ் இல்லாமல் எழுபத்தைந்து சதவிகிதத் தேர்ச்சி என்பது, மேற்கொண்ட கல்வித் துறைகளில் மாணவனின் ஆளுமை குறித்த நம்பிக்கையை, வேலை வாய்ப்பு வழங்க வந்திருக்கும் நிறுவனத்திற்கு ஏற்படுத்துகிறது.
எழுத்துத் தேர்வு, ஏட்டளவில் கற்றதை நடைமுறைக்கு கொண்டுவரும் ஆற்றலை உறுதி செய்து கொள்ளத் துணைபுரிகிறது. மூன்றாவதாகக் குழு கலந்துரையாடல், மாணவரின் தனிமனிதப் பண்புகள், பேசுகிற – பழகுகிற முறை, முடிவெடுக்கும் ஆற்றல், ஒரு குழுவின் அங்கமாகப் பணிபுரியும் தன்மை போன்றவற்றை நிர்ணயிக்க உறுதுணை புரிகிறது.
இத்தனைக்கும் பிறகு, தொடக்கச் சம்பளத்தை நிர்வாகம் நிர்ணயிக்கிறது. மாணவனின் திறமைகள் பெருமளவில் நிர்வாகத்தை ஈர்த்துவிட்டால், மாணவன் கேட்கும் தொகை அதிகமாக இருந்தாலும் பரிசீலிக்கப்படுகிறது.
இன்று மென்பொருள் நிறுவனர்கள் (சாஃப்ட்வேர்)தான் அதிகமாக இத்தகைய கேம்பஸ் இண்டர்வியூக்களை நடத்துகின்றன. முன்பைவிடவும் இந்தத் தேர்வு முறையில் இப்போது போட்டிகள் அதிகம். ஏனெனில் தனியார் நிறுவனங்களில் பதவி விலகுவோர் எண்ணிக்கை மிகுதியாக குறைத்திருக்கிறது. எனவே, தங்கள் திறமையை முழுவதும் வெளிப்படுத்தும் மாணவர்களுக்குத்தான் பெரிய நிறுவனங்கள் இந்த வாய்ப்பை வழங்குகிறார்கள்.
எனவே, தான் தேர்ந்தெடுக்கும் பாடப்பிரிவு பற்றி சிலபஸில் இருப்பதை மட்டும் பயிலாமல், நூலகங்களின் துணையோடு துறைசார்ந்த அறிவைப் பெருக்கிக் கொள்வது அவசியம்.
கேம்பஸ் இண்டர்வியூ இறுதியாண்டில்தானே என்று அலட்சியமாக இருக்கவும் வாய்ப்பில்லை. அரியர் இல்லாமல் எழுபத்தைந்து சதவிகிதம் என்கிற முதல் நிபந்தனையைப் பார்த்தால், கல்லூரியில் சேர்ந்த முதல்நாளே கேம்பஸ் இண்டர்வியூவிற்குத் தயாராக வேண்டிய அவசியம் புரியும்.
சரி… ஒருவேளை கேம்பஸ் இண்டர்வியூவிற்கு அழைக்கப்படவில்லை என்றால், அத்தகைய மாணவர்கள் என்ன செய்யலாம்?
(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)