2.“முடியாது” என்று சொல்லமுடிகிறதா உங்களால்?
“ஓ! அப்படீங்களா… அதுக்கென்ன பண்ணிடலாம்! நிச்சயம்! என்னங்க. அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினையில்லை! உங்களுக்குச் செய்யலாமா? நல்லதுங்க.. வெச்சுடறேன்!” தொலைபேசியை வைத்த மாத்திரத்தில், “வேற வேலை இல்லை! இருக்கிற வேலை போதாதுன்னு இது வேறே” என்று முணுமுணுத்துக்கொண்டே புதிய வேலை ஒன்றை வேண்டா வெறுப்பாகத் தொடங்குபவரா நீங்கள்? அப்படியானால், “முடியாது” என்று சொல்லமுடியாதவர் நீங்கள்.
பெரும்பாலும், மற்றவர்கள் தவறாக எண்ணிக்கொள்வார்கள் என்கிற பயத்தில்தான் நம்மால்முடியாத வேலைகளையும் இழுத்துப்போட்டுக் கொண்டு கொண்டு சிரமப்படுகிறோம். “நீங்க நினைச்சா செய்யலாம்” “உங்ககிட்ட சொல்லிட்டா போதும்னு அப்பவே சொன்னேன்” என்பது போன்ற பாராட்டுகளுக்கு மயங்கி, மறுத்துச் சொல்ல மனம் வராமல் சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறோம். இதிலிருந்து விடுபட்டால்தான், பயனுள்ள காரியங்களைச் செய்யமுடியும். அனாவசிய டென்ஷன்களில் இருந்தும் விடுதலை கிடைக்கும்.
உடனே ஓ.கே. சொல்லாதீர்கள்.
சிலர் இருக்கிறார்கள். யார் எதைச் சொன்னாலும் “அதுக்கென்ன பண்ணிடலாம்” என்று சொல்வார்களே, தவிர அந்த வேலை அங்குலம்கூட நகராது. இதனால் உதவி கேட்டு வந்தவர்களுக்கும் சங்கடம்; இவருக்கும் கெட்ட பெயர்.
ஒரு விஷயம் காதில் விழுந்ததுமே நம்மால் முடியுமா இல்லையா என்று யோசிக்க வேண்டும். முடியாது என்று தெரிந்தால், “இது நமக்கு சாத்தியமில்லீங்களே!” என்று சொல்லிவிட வேண்டும்.
நம்மால் நிச்சயமாக முடியும் என்று தெரிந்தால்கூட “கொஞ்சம் யோசிச்சுச் சொல்றேன்” என்று சொல்லிவையுங்கள். இதனால், மாற்று ஏற்பாட்டுக்கு மனரீதியாக அவர் தயாராவார்.
முடியாத ஒன்றை “முடியாது” என்று சொல்லத் தயக்கம் தேவையில்லை. அந்த நேரத்திற்கு சிறு வருத்தம் தோன்றும். ஆனால் செய்கிறேன் என்று சொல்லிவிட்டுச் செய்யாமல் விடுவதால் பெரிய விரோதமே ஏற்படும்.
எடுத்த எடுப்பிலேயே முழு நம்பிக்கை கொடுத்துவிட்டு, போகப் போக சந்தேகமாகச் சொன்னால் அதுதான் உறவுகளைப் பாதிக்கும்.
பெருந்தலைவர் காமராஜர், தன்னால் நிச்சயமாகச் செய்ய முடிந்த வேலைகளைக்கூட, “ஆகட்டும் பார்க்கலாம்” என்றுதான் சொல்வார். ஆனால் செய்து கொடுத்துவிடுவார். முடியாதவற்றை “முடியாது” என்று மறைக்காமல் சொல்லிவிடுவார்.
அரைமனதாய்ச் செய்யும் அனாவசிய முயற்சிகள்
யாரோ ஒரு நண்பர் உங்களிடம் கடன் கேட்கிறார் என்று வைத்துக்கொள்ளலாம். ஒன்று அவர் நம்பிக்கைக்குரியவராய் இல்லாமல் இருக்கலாம். அல்லது அப்போது உங்களிடம் பணமின்றிப் போகலாம். அந்த சூழ்நிலையில் மென்மையாகப் பேசி “முடியாது” என்று உறுதியாகச் சொல்வதே நல்லது.
“என்கிட்டே இல்லை! இன்னொருத்தர்கிட்ட கேக்கிறேன்” என்று வேண்டா வெறுப்பாகத் தொலைபேசியில் பேசுவது, அல்லது “நாளைக்கு வாங்க! கேட்டுச் சொல்றேன்” என்று இழுத்தடிப்பது எல்லாமே உங்கள் நேரத்தையும் அவர் நேரத்தையும் வீணடிக்கும்.
எல்லோருக்கும் நல்லவரா நீங்கள்?
எல்லோருக்கும் நல்லவன் பொல்லாதவன் என்றொரு பழமொழி உண்டு. எனவே நல்ல பெயர் “வாங்குகிற” முயற்சியில் இருக்கும் பெயரையும் கெடுத்துக்கொள்ள வேண்டாமென்றால் தவறான உறுதிமொழிகளையும் தராதீர்கள்.
கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவது என்பது பெரிய விஷயம். ஒருவர் உதவி கேட்டு வருகிறார் என்றால், அதை ஒப்புக்கொண்ட மறுவிநாடியே அது உங்கள் கடமையாகிவிடுகிறது. நீங்கள் பதில்சொல்ல வேண்டிய கடமைக்குத் தள்ளப்படுகிறீர்கள். அதேநேரம் செய்யக்கூடிய உதவிகளை உடனடியாக, தாமதமில்லாமல் செய்துகொடுங்கள்.
நீங்கள் மறுத்துச் சொன்னாலும் உங்கள்மீது நல்லெண்ணமும் நம்பிக்கையும் வளர அதுவே வழி. “ஊருக்கு உழைத்தவன்” என்ற பட்டத்திற்கு ஆசைப்படும் பலர், “ஊருக்கு இழைத்தவன்” என்ற நிலைக்குத் தள்ளப்படத் தலையாய காரணம், அவர்கள் “தலைதான்.”
தலையை இட வலமாக ஆட்ட வேண்டிய நேரங்களில் மேலும் கீழுமாக ஆட்டுவதால் வருகிற சிக்கல் இது. இப்போது சொல்லுங்கள், முடியாது என்று சொல்லமுடியும்தானே உங்களால்?
(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)