5.தோல்வி சகஜம்… வெற்றி-?
தோல்வி சகஜமென்றால் வெற்றி, அதைவிட சகஜம்! இதுதான் வெற்றியாளர்களின் வரலாறு. இந்த மனப்பான்மை வளருமேயானால் தோல்வி பற்றிய அச்சம் துளிர்விடாது. இதற்கு நடைமுறையில் என்ன வழி? இதைத்தான் உங்களுடன் விவாதிக்கப்போகிறேன்.
உலகில் பெரும்பாலானவர்கள் செயல்படாமல் இருக்கக் காரணம், தகுதியின்மை அல்ல. தோல்வி அடைவோமோ என்கிற அச்சம்தான்.
தோல்வி பற்றிய அச்சம் நமக்குக் கூடாதென்றால், முதலில் தோல்விக்கும் வெற்றிக்கும் இருக்கிற சம்பந்தத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
நாம் எதைச் செய்தாலும் அதற்கு இரண்டே வழிகள்தான். ஒன்று சரியான வழி-. இன்னொன்று தவறான வழி. முதல் வழி தவறாகிவிட்டால் அதை தோல்வியென்று கருதுகிறோம். அதுதான் தவறு. ஒன்று தெரியுமா? யாரும் தெரிந்து தவறு செய்வதில்லை. ஆனால் தவறு செய்ததன் மூலம் தெரிந்துகொள்கிறோம். அடுத்தடுத்த முயற்சிகள் சரியாக அமைவதற்கு முதல் தோல்வி வழி செய்கிறது.
இந்தக் கண்ணோட்டம் இல்லாதவர்கள், முதல் தோல்வியே முயற்சிக்கு முற்றுப்புள்ளி என நினைத்து முடங்கிவிடுகிறார்கள். வெற்றி இப்போது கிடைக்கவில்லை என்பதாலேயே எப்போதும் கிடைக்காது என்று பொருளல்ல. மூத்த வெற்றியாளர்களின் அனுபவங்களைக் கேளுங்கள். அவர்கள் தற்காலிகத் தோல்விகள் பலவற்றையும் தாண்டிய பிறகுதான் நிரந்தர வெற்றியை நெருங்கியிருப்பார்கள்.
“ஒவ்வொரு தோல்வியும், ஒவ்வொரு பின்னடைவும், அதற்கு இணையான, அல்லது அதைவிடவும் அதிகமான ஆதாயத்தின் விதையாகத்தான் விழுகிறது” என்கிறார் நெப்போலியன் ஹில். எனவே, தோல்விகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.
உங்களுடன் இருக்கும் சிலர் எளிதில் வெற்றி பெற்றிருப்பார்கள். அவர்களைப் பார்த்துப் பொறாமைப்படாதீர்கள். எளிதில் பெறும் வெற்றியைவிடவும் முயன்று பெறுகிற வெற்றிதான் இனிமையானது. தழும்புகளைத் தடவிப் பார்த்துக்கொள்ளும் போர்வீரன்போல, தோல்வியின் அனுபவங்கள்தான் அடையும் வெற்றியை ஆழமாக்கும். அதனால்தான் அனுபவம் வாய்ந்த நிர்வாகிகள், ஊழியர்களின் தொடர் தோல்விகளைப் பெரிதுபடுத்த மாட்டார்கள். “எதையுமே செய்யாதவர்கள்தான் தவறு செய்யாதவர்கள்” என்பதை மறந்து விடக்கூடாது.
ஒரு தோல்வியிலிருந்து மீள்வதற்கு என்ன வழிதெரியுமா? அந்தத் தோல்வியின் விளைவை நிதானமாக எதிர்கொள்வதுதான். இரவு நீண்டநேரம் டி.வி.பார்த்துவிட்டு உறங்கப்போகும் ஒரு மார்க்கெட்டிங் அலுவலர் காலையில் எட்டு மணி வரை தூங்குவார். எட்டரை மணிக்கு அவருக்கொரு முக்கிய சந்திப்பு இருந்திருக்கும். மனைவி எழுப்பிவிட, அவசரம் அவசரமாய்ச் சென்று அந்த சந்திப்பையே சொதப்பியிருப்பார். வீட்டுக்கு வந்து என்ன சொல்வார் தெரியுமா?
“சனியனே! உன் முகத்திலே முழிச்சேன்! காரியம் உருப்படலை!” இவர் தோல்வியின் காரணத்தைப் புரிந்துகொள்ளவில்லை. கற்பனை செய்கிறார். பலரும் இப்படித்தான். தங்கள் தோல்வியின் காரணத்தைக் கண்டறிவது இல்லை. கற்பனை செய்கிறார்கள்.
தங்கள் தோல்வியின் காரணத்தைக் கண்டறிபவர்கள் திருத்திக் கொள்கிறார்கள். காரணத்தைக் கற்பனை செய்பவர்கள், தொடர் தோல்விகளுக்கு ஆளாகிறார்கள்.
எனவே, தோல்வி நேர்ந்தால் ஏன் நேர்ந்ததென்று பாருங்கள். இல்லாத காரணங்களைக் கற்பனை செய்து கொள்ளாதீர்கள்.
“இதுதான் எனக்கு வரும்” என்று உங்கள் எல்லைகளை நீங்கள் குறுக்கிக்கொள்ளாதீர்கள்.
“எங்கே தவறுகிறோம்” என்பதைப் பட்டியலிட்டு, அடுத்த முயற்சியில் உங்கள் தவறுகளைக் களைந்துவிடுங்கள்.
வெற்றி மிக இயல்பாக ஏற்படுவதை நீங்களே காண்பீர்கள்!
(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)