7.நினைவாற்றலை நம்பாதீர்கள்!
நினைவாற்றல் நிறைய உள்ளவரா நீங்கள்? அப்படியானால் உங்கள் நினைவாற்றலை நம்பாதீர்கள். படித்த விஷயங்கள், அபூர்வமான சம்பவங்கள், பழகிய முகங்கள், எப்போதோ போன இடங்கள், இவற்றையெல்லாம் நினைவு வைத்துக்கொள்ள நினைவாற்றல் அவசியம்தான். ஆனால், அவ்வவ்போது தோன்றும் யோசனைகள், அன்றாட வேலைகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவற்றை, நினைவில் வைத்திருந்து, பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்றுவிட்டால் எப்படியோ மறந்துவிடும்.
நினைவாற்றல் என்பது நிலைக்காத கூட்டணி மாதிரி. எதிர்பாராத நேரத்தில் காலை வாரிவிடும். எனவே முழுக்க முழுக்க நினைவாற்றலை மட்டும் நம்பியிருக்காதீர்கள்.
குறிப்பேடுகள்
பொதுவாக, நினைவுக் குறிப்புகளைத துண்டுச்சீட்டிலும் தனக்கு வந்த கடித உறைகளிலும் சிலர் எழுதி வைத்துக்கொள்வார்கள். இதுவும் தவணைமுறையில் எழுதி, மொத்தமாய்த் தொலைப்பதற்கான ஏற்பாடுதான். துண்டுச்சீட்டில் இருக்கும் இன்னொரு சங்கடம், இடப் பற்றாக்குறை. விரிவான விபரங்களை எழுதமுடியாது. ஒரு முக்கிய சந்திப்பில் பேச வேண்டிய விஷயங்கள் திடீரென்று மனதில் பளிச்சிடும். அதற்குப் பொருத்தமான வார்த்தைகள்கூட அப்போது தோன்றும். அவற்றைத் துண்டுச்சீட்டில் எழுத முடியாது. இதற்கு நல்ல தீர்வு, குறிப்பேடுகள்தான். பாக்கெட் நோட்டுகள் போதாது. உங்கள் அலுவலகத்திலும் வீட்டிலும் ஒரு குறிப்பேட்டை வைத்திருப்பது நல்லது. அவ்வவ்போது குறித்துக்கொண்டே வரும்போது அவற்றைத் தொகுத்துப் பார்க்கையில் ஒரு விஷயம் பற்றிய தெளிவான பார்வை கிடைக்கும்.
விசிட்டிங் கார்டுகள்
நம்மிடம் கத்தையாகப் பலரின் விசிட்டிங் கார்டுகள் இருக்கும். கொஞ்ச காலம் கழித்துப் பார்க்கையில் அவர் யார், எங்கே, எதற்காகச் சந்தித்தோம் என்பதெல்லாம் நினைவுக்கே வராது. இதற்கு நல்ல வழி, கார்டை வாங்கியதுமே பேசிக்கொண்டே அந்தச் சந்திப்பு பற்றிய விபரங்களை அட்டைக்குப் பின்னால் குறித்துக்கொள்வதுதான். அதனை விசிட்டிங் கார்டு ஹோல்டரில் வைத்திருந்து, தேவை ஏற்படுகையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நினைவூட்டும் கருவிகள்
நம்மில் பலரும் சில விஷயங்களை நினைவுபடுத்துமாறு உதவியாளரிடம சொல்வோம். அதற்கான நேரம் முடிந்தபிறகு, உதவியாளரை அழைத்து, நினைவுபடுத்தாததை நினைவுபடுத்த வேண்டியிருக்கும். இன்று நம்மிடம் உள்ள அத்தியாவசியக் கருவிகள் பலவற்றில் நினைவூட்டும் அம்சங்கள் உள்ளன. நம்முடைய செல்ஃபோனில்கூட ரிமைண்டர் என்றொரு பகுதி உள்ளது. உடனடியாக எழுதிக்கொள்ள முடியாத நேரங்களில் ஒற்றை வாசகமாகப் பதிந்துவைத்தால், உரிய நேரத்தில் ‘ஓ’ போட்டு நமக்கு நினைவூட்டும். அத்துடன் விடுமா? 10 நிமிடம் கழித்து மறுபடி அலறும். பாக்கெட் கால்குலேட்டரில்கூட இந்த வசதி உண்டு. ஆனால் பலரும் பயன்படுத்துவதில்லை.
மறதி இயல்புதான்
ஆனால் மறதியில் வரும் விளைவுகள் இயல்பானது அல்ல. பணி பாதிக்கப்படுவது ஒருபுறம் இருக்கட்டும். இயல்பாக ஏற்படும் மறதியைக்கூட ஏதோ நோய் என்று கருதிக் கொண்டு, நம் செயல்திறன் மீது நமக்கே நம்பிக்கை குறையத் தொடங்கும். இது வீணான கலக்கம். நினைவு ஆற்றலை முக்கிய விஷயங்களுக்கு மட்டும் பயன்படுத்துங்கள். அன்றாடப் பணிகளுக்குக் குறிப்புகள் எழுதிப் பழகுங்கள். ஒரு விஷயம் எப்படி வளர்ந்தது, எப்படி சமாளித்தீர்கள் என்பதையெல்லாம் பதிவு செய்யும் அனுபவக் களஞ்சியமாகவும் உங்கள் குறிப்பேடுகள் பயன்படும்.
(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)