எங்கிருந்து வருகின்றன எதிர்மறை எண்ணங்கள்?
ஒரு செயலைத் தொடங்கும்போது, வெளியிலிருந்து வரும் எதிர்ப்புகளைக்கூட கையாள முடியும். உங்களுக்குள்ளேயே எழுகிற எதிர்ப்புகளைக் கட்டுப்படுத்தாவிட்டால் அவை எதிர்மறை எண்ணங்களாக உங்களுக்குள் பதிந்துவிடும்.
எதிர்மறை எண்ணங்கள் அடிமனதில் பதிவாகும்போது, அவை உங்களைப் பற்றிய பலவீனமான ஒரு பிம்பத்தை உங்களுக்குள் ஏற்படுத்துகின்றன.
அவை, அந்தப் பிம்பத்தைத் திரும்பத் திரும்பக் காட்டி, அந்தப் பலவீனத்தை உங்கள் ஆளுமையின் ஓர் அங்கமாகவே மாற்றிவிடுகின்றன.
உங்கள் ஆளுமையில் அந்த பலவீனமான அம்சம் இருந்தால், உங்களை சரியாக செயல்படவிடாது.
அந்தப் பலவீனத்தை அகற்ற வேண்டுமென்றால் முதலில் எதிர்மறை எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றன என்பதைப் பார்க்க வேண்டும்.
அந்த எண்ணங்களை அகற்ற, சில அடிப்படைக் குணாதியங்களை மாற்ற வேண்டும். இதோ, எதிர்மறை எண்ணங்களின் விஷமூலங்கள்.
பாதுகாப்பு பற்றிய அச்சம்
வாழ்க்கையைப் பாதுகாப்பாக நடத்த வேண்டும் என்கிற அச்சம் அனைவருக்குமே உண்டு. புதிதாக ஒன்றைத் தொடங்கினால் எதையாவது இழக்க வேண்டி வருமோ என்கிற அச்சம்தான், அந்தச் செயலை ஆரம்பிக்கவிடாமல் தடுக்கிறது.
எனவே, புதிய செயலைத் தொடங்குவதில் என்னென்ன ஆபத்துகள் இருக்கின்றன. அவற்றை எப்படியெல்லாம் எதிர்கொள்ளப் போகிறீர்கள். அப்படி எதிர்கொண்டு அந்தச் செயலைச் செய்வதால் என்னென்ன நன்மைகள் என்றெல்லாம் விரிவான குறிப்பை எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்.
பாதுகாப்பு பற்றிய அச்சம் வரும்போதெல்லாம் அந்தக் குறிப்பை நன்றாகப் பார்த்து நினைவுபடுத்திக் கொண்டால் நம்பிக்கை வளரும். அச்சம் மெல்ல மெல்ல மறையும்.
தோல்வி பற்றிய அச்சம்
பொதுவாகவே, தோல்வி பற்றிய அச்சம் எல்லோருக்கும் உண்டு. எது அச்சம் தருகிறதோ அதை முதலில் எதிர்கொள்வதுதான் அந்த அச்சத்தை வெல்வதற்கான வழி. ஒரு நல்ல செயலைச் செய்வதற்கான எல்லாத் தகுதிகளும் இருக்கும். தவறு நேர்ந்தால் எல்லாம் இகழ்வார்களே என்ற அச்சம் காரணமாக அதைத் தள்ளிப்போடுவார்கள்.
இவர்கள், அந்தச் செயல் வெற்றி பெறும்போது எத்தகைய பெயரும் புகழும் ஏற்படும் என்பதை மனச்சித்திரமாக்கிப் பார்த்தாலே, இந்த அச்சத்தின் விளைவாக எழும் எதிர்மறைச் சிந்தனைகளை எளிதாக வென்றுவிடலாம்.
இவை பெரும்பாலும் பழைய தவறுகளின் எதிரொலிகள். ஒன்றைச் சரியாக செய்து முடிக்க வேண்டும் என்கிற எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தும் வரையில், இந்தச் சந்தேகம் நல்லதுதான். ஆனால், செயல்படவிடாமல் தடுக்கும் அளவு முற்றும்போதுதான் அந்தச் சந்தேகம் எதிர்மறை எண்ணமாகிறது.
சந்தேகம் என்பது, சாலைகளில் ஒரு வேகத்தடை போல் இருக்கும் வரைக்கும் சிக்கலில்லை. அந்த வேகத் தடை உங்கள் பாதையையே தடை செய்யக்கூடாது. எனவே, சந்தேகம் ஓர் எல்லைக்கு மேல் வளர்கிறதென்று தெரிந்தால் அதை அங்கேயே அலட்சியப் படுத்துங்கள்.
மாற்றம் பற்றிய அச்சம்
புதிதாக ஒன்றுக்கு மாறுவது, புதிய சூழலை எதிர்கொள்வது என்பதில் எல்லாம் இருக்கிற தயக்கங்களைத் தாண்டிவிட வேண்டும். இந்த அச்சம் இருக்கிறதே, இது சமூக உறவுகளைக் கூட வளரவிடாமல் உங்களை சங்கோஜம் மிக்க மனிதராக மாற்றிவிடும். எனவே, முடிந்த வரையில் புதிய இடங்களை – புதிய மனிதர்களை – புதிய வாழ்க்கைச் சூழல்களைத் தேடிப்போய்ப் பழகுங்கள்.
இந்த நான்கு குணங்களில்தான் எதிர்மறைச் சிந்தனைகள் பெரும்பாலும் ஏற்படுகின்றன. அவற்றை மாற்றினாலே போதும். சாதனைகள் செய்வது சுலபம்.
(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)