15. முரண்பாடுகளில் இருந்து உடன்பாடு நோக்கி…
மனித மனங்களில் அதிக பட்சம் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடியவை எவையென்று தெரியுமா? மற்றவர்களுடனான முரண்பாடுகள்தான். நம்முடைய கருத்துக்கு எதிராக ஒருவர் எதையாவது சொல்லிவிட்டால் முதலில் மெதுவாக மறுக்கிறோம். வாதம் தொடரத் தொடர உடல் பதறுகிறது. ரத்தம் கொதிக்கிறது. மூளை சூடாக வார்த்தை தடிக்கிறது. அந்தப் பதற்றம் பல மணி நேரங்களுக்கு நம்மைப் புரட்டிப்போடுகிறது.
அது மட்டுமா? மீண்டும் அந்த மனிதரைப்பற்றி யோசித்தாலோ, எங்காவது பார்த்தாலோ நம்மை மறுபடியும் அதே பதற்றம் ஆட்டி வைக்கிறது.
நம்முடன் ஒருவர் முரண்படுவதையே நாம் ஏற்கவில்லை என்றால், அதுவே அடிப்படையின் முரண்பாடுகள். இந்த உலகில் ஒரே ஒரு கருத்து என்று ஒருநாளும் இருந்ததில்லை.
எனவே, மற்றவர்கள் நம்முடன் முரண்படுவதை அனுமதிக்கும்போதுதான், நமக்கு மற்றவர்களின் கருத்துகளோடு முரண்பட உரிமை இருக்கிறது.
இந்தத் தெளிவு ஏற்பட்டாலே முரண்பாடுகளைத் தீர்ப்பதில் முதலடி எடுத்து வைக்கிறீர்கள் என்று அர்த்தம்.
எந்த முரண்பாடு நீண்டுகொண்டே போகும் தெரியுமா? எதிர்த்தரப்புக்கு சமரசத்தில் அக்கறையில்லை என்று தெரிந்தால் மட்டும்தான் யாருமே தொடர்ந்து வாதிட்டுக் கொண்டிருப்பார்கள்.
முரண்பாடு என்று வந்ததுமே ஒரு பொதுவான தீர்வுக்கு நீங்கள் தயாராக இருப்பதை எதிர்த்தரப்புக்கு உணர்த்துவது முக்கியம்.
சிக்கலே இல்லாத பல வழக்குகள்கூட, வெறும் வீம்பு காரணமாக நீண்ட காலமாய் நடந்துகொண்டிருக்கின்றன. சமரம், சமாதானம் என்பதெல்லாம் தோற்றுப்போவது என்கிற ஒரு தவறான எண்ணம் இருந்துகொண்டிருக்கிறது.
சமரம் என்பது சிக்கலுக்குப் புதிய தீர்வைக் கொண்டு வருவது. இப்போது இருப்பதைவிடவும் சுமூகமான, சுதந்திரமான சூழ்நிலையை உருவாக்குவது. எனவே, உங்கள் கருத்தை உறுதியாக வலியுறுத்தும்போதே சமசரதிற்கும் வாய்ப்பு இருப்பதை எதிர்த்தரப்புக்கு உணர்த்துங்கள்.
இதையும் மீறிப்போகுமானால், நம்பகமான நடுநிலைநிலையாளர்களை நாடலாம்.
நீங்களே பேசித் தீர்த்தாலும் சரி, நடுநிலையாளர்களை அணுகினாலும் சரி, பொதுத்தீர்வு காண்பதில் நீங்கள் ஆர்வமாயிருந்தாலே எதிர்த்தரப்பில் இருப்பவரும் இறங்கிவருவார்.
முயன்று பாருங்கள். முரண்பாடு மாறும். உடன்பாடு சாத்தியமாகும்.
(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)