என்ன பெயர் வைக்கலாம்?
குழந்தை பிறக்கவில்லை என்று கோவில் கோவிலாக ஏறி இறங்குபவர்கள், குழந்தை பிறந்தவுடன் “என்ன பெயர் வைக்கலாம்” என்று ஒவ்வொரு ஜோதிடர் வீடாக ஏறி இறங்குகிறார்கள். நட்சத்திரத்தின்படி, நியூமராலஜியின்படி, நேமாலஜியின்படி என்று எல்லாம் பார்ப்பதால்தான் படிப்படியாக ஏறி இறங்க வேண்டி வருகிறது. சிலர் வம்பே வேண்டாம் என்று குலதெய்வத்தின் பெயரையோ, பெற்றோர் பெயரையோ வைக்க முடிவெடுத்து விடுகிறார்கள்.
அதிலேயும் சில குடும்பங்களில் சிக்கல் வருவதுண்டு. மாமனார், மாமியாருடன் மனத்தாங்கல் உள்ள மருமகனோ, மருமகளோ குழந்தைக்கு அவர்கள் பெயரை வைப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதுண்டு. குழந்தை பெயரை சாக்காக வைத்து நேராகவே திட்டலாம் என்றுதான்.
இன்னும் சில குடும்பங்களில் இன்னொருவிதமான சிக்கலும் எழுவதுண்டு. பிறந்த ஆண் குழந்தைக்கு யார் பெயரை வைப்பது என்று கணவனுக்கும், மனைவிக்கும் வாக்குவாதம். தன்னுடைய தந்தை பெயரைத்தான் வைக்க வேண்டும் என்று கணவன் பிடிவாதம் பிடித்தான். “இல்லையில்லை. எங்க அப்பா பேர்தான் வைக்கணும்” என்று மனைவி அடம்பிடித்தாள்.
விவகாரம் முற்றி வீதிக்கு வந்தது. அடுத்த வீட்டுக்காரர் பஞ்சாயத்துக்கு வந்தார். விவரம் கேட்டார். “இதுக்குப்போயா சண்டை போடறீங்க?” என்றவர், கணவன் பக்கம் திரும்பிக் கேட்டார். “உங்க அப்பா பேர் என்ன சார்?” “சிவலிங்கமுங்க-!” மனைவி பக்கம் திரும்பிக் கேட்டார். “உங்க அப்பா பேர் என்னம்மா?” “ராமச்சந்திரனுங்க!”
“இவ்வளவுதானே! சிவராமகிருஷ்ணன்னு பேர் வைச்சுடுங்க!” தீர்ப்பு சொல்லிவிட்டுப் போய்விட்டார். இருவருக்குமே சந்தோஷம். திடீரென்று கணவனுக்கு ஒரு சந்தேகம். பக்கத்து வீட்டுக்காரரிடமே கேட்டார். “ஏன் சார்! சிவலிங்கம் எங்க அப்பா பேரு! ராமச்சந்திரன் அவங்க அப்பா பேரு! சிவராமன் வரைக்கும் சரி, கிருஷ்ணன்ங்கிறது யாரு?”
உடனே பக்கத்துவீட்டுக்காரர் சொன்னார். “அது எங்க அப்பா பேரு!” பேர் வைப்பதில் பிறர் யோசனை கேட்டால் இப்படியெல்லாம் சில விபரீதங்கள் வருவதுண்டு.
சில தீவிரமான தொண்டர்கள், தங்கள் தலைவர்களின் பெயர்களை வைப்பார்கள். இன்னும் சிலபேர், தாங்கள் பெற்ற பிள்ளையைத் தூக்கிக்கொண்டு போய் தலைவர்களையே பெயர் வைக்கச் சொல்லி அதற்காக, தட்சணையும் வைப்பார்கள்.
இப்போதெல்லாம் பலரும், ஃபேஷன் கருதி, வாயில் நுழையாத பெயர்களை வைக்கிறார்கள். அந்தப் பெயருக்கு என்ன அர்த்தமென்பது பெற்றோர்க்கும் தெரியாது. பிள்ளைகளுக்கும் தெரியாது.
கம்பீரமான பெயர்களை வைப்பதும், கம்பீரமாகப் பிள்ளைகளை வளர்ப்பதும் மிகவும் முக்கியம். பெயர்களுக்கென்று சில அதிர்வுகள் உண்டு.
நாளன்றுக்கு, அந்தப் பெயரை பத்துப்பேர் அழைக்கிறார்களா? பத்து லட்சம் பேர் அழைக்கிறார்களா என்பது முக்கியமில்லையா?
நேர்மறையான அதிர்வுகள் கொண்ட பெயர்களை வைப்பது மட்டுமே முக்கியமில்லை. அத்தகைய பெயர்களை வாழ்க்கையில் பயன்படுத்துவதும் முக்கியம். சில குடும்பங்களில் மகளுக்கு, “லட்சுமி” என்று பெயர் வைக்கத் தயங்குவார்கள். திருமணம் செய்து கொடுத்தால் “லட்சுமி” வெளியேறிவிடுவதாக அஞ்சுவதுதான் காரணம்.
நபிகள் நாயகம், பெயர்களுக்கான அர்த்தத்தில் மிகவும் அக்கறை காட்டுவார். ஒரு நண்பரை ஆட்டுப் பால் கறக்கச் சொன்னவர், யோசித்துவிட்டு, “நீ கறக்க வேண்டாம்” என்றாராம். ஏனெனில், அந்த நண்பரின் பெயர், “முர்ரா.” “முர்ரா” என்றால் கசப்பு என்று அர்த்தம். பிறகு “யஈஷ்’’ என்ற நண்பரைப் பால் கறக்கப் பணித்தாராம் நபிகள். “யஈஷ்” என்றால் “வாழ்பவர்” என்று அர்த்தம்.
“செல்வம்” என்ற பெயருள்ள பிள்ளைகளைத் தேடி நண்பர்கள் வருவார்கள். “செல்வம் எங்கே” என்று கேட்டால், “செல்வம் இல்லை” என்று பதில் சொல்லக்கூடாது. “இப்ப வந்துடுவார்” என்று சொல்லவேண்டும். இவையெல்லாம் சில நம்பிக்கைகள்தான்.
பேர் சொல்லும் பிள்ளைகளாய், பேரெடுக்கும் பிள்ளைகளாய் வளர்ப்பதுதான் முக்கியம். பேர் கெடுக்கும் விதமாய் பிள்ளைகளை வளர்த்தால் என்ன பெயர் வைத்தும் பயனில்லை.
பிள்ளைகளின் நல்வாழ்வு பெயரிலிருந்து தொடங்குகிறது. நன்கு யோசித்து, நல்ல அர்த்தமும் நல்ல அதிர்வுகளும் கொண்ட பெயர்களையே பிள்ளைகளுக்குச் சூட்டுங்கள்.
(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)