வீட்டுக்கு வீடு வார்த்தைப்படி
“ஆதியில் வார்த்தைகள் இருந்தன. வார்த்தைகள் தேவனோடு இருந்தன. வார்த்தைகள் தேவனாகவே இருந்தன” என்கிறது விவிலியம். வார்த்தைகள் நாம் வெறும் கருத்து வாகனமென்று கணித்து விடக்கூடாது. நாம் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் நம் வாழ்வின்மேல் சில தாக்கங்களை ஏற்படுத்தவல்லவை.
சில கடைகளில் சென்று, “அரிசி இருக்கிறதா” என்று கேட்டால், “பருப்பு இருக்கிறது” என்று பதில் சொல்வார்கள். இது சம்பந்தமில்லாத பதிலல்ல. இயன்ற வரை ‘இல்லை’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதில்லை என்கிற உணர்வின் வெளிப்பாடே அது.
தென்மாவட்டத்துத் தாய்மார்கள், பிள்ளைகள் தவறு செய்கையில் சினத்தின் உச்சியில் சிந்தும் வசைச்சொற்கள் கூட, மாறு வேடம் பூண்ட வாழ்த்துச் சொற்களாகவே மலரும். “நாசமத்துப் போக” என்று முடியும்.
“நாசம் அற்றுப்போக” என்றால், “நன்றாக இரு” என்றுதான் அர்த்தம். சிலருக்கு நல்ல சொற்கள் பேசவே நா எழும்பாது. சின்னச் சின்ன சம்பவங்களை விவரிக்கும் போதுகூட, “நான் நாசமாயிட்டேன்”. நொந்து போயிட்டேன்” என்பதுபோன்ற வார்த்தைகள் வந்து விழும்.
எனக்குத் தெரிந்த ஒருவரின் பெயர் தீனதயாளன். “தீன நிலையில் இருப்போருக்கு தயாளம் காட்டுகிற இறைவன்” என்பது இந்தப் பெயரின் பொருள். அவரை குழந்தைப் பருவம் முதல் அனைவரும் “தீனா” , “தீனா” என்றழைப்பார்கள். இளமையிலிருந்தே நோய்வாய்ப் பட்டவராய் வாழ்வின் எந்த மேன்மைகளையும் எதிர் கொள்ளாமலேயே தீன நிலையில் வாழ்ந்து வருகிறார்.
இது மூட நம்பிக்கையல்ல. “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்பது தமிழிலக்கணம். ஒரு சொல்லைச் சொல்லுகையில் அதன் பொருளுக்கேற்ற அதிர்வுகளும் எதிரொலிக்கின்றன. அப்படிப் பார்த்தால் சொற்களனைத்துமே மந்திரத் தன்மை வாய்ந்தவை. “மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம்” என்று மகாகவி பாரதி இதைத்தான் சொல்கிறான்.
இன்று, மகிழ்ச்சியான வாழ்வுக்கும், வெற்றிமயமான வாழ்வுக்கும் வழிசொல்ல வரும் நிபுணர்கள், “சுய கருத்தேற்றம்” என்கிற உத்தியை உணர்த்துகிறார்கள். ஒரு வாசகத்தை மனதுக்குள் வடித்துக்கொண்டு, அதையே தினமும் குறிப்பிட்ட நேரத்தில் மனதுக்குள் உத்வேகத்தோடு திரும்பத் திரும்பச் சொல்வதே சுய கருத்தேற்றம்.
“அச்சம்” என்னும் உணர்வால் அவதிப்படுகிறவர்கள் ஒரு நேரத்தைத் தேர்ந்தெடுத்து தினமும் அதேநேரத்தில் குறைந்தது அரைமணி நேர அளவு “நான் துணிச்சலோடு இருக்கிறேன்” என்று மனதுக்குள்ளேயே சொல்லிச் சொல்லிப் பார்ப்பதற்கு “சுயகருத்தேற்றம்” என்று பெயர்.
இதேபோல, நோய்வாய்ப்பட்டிருப்பதாக கற்பனையிலோ, அச்சத்திலோ வருந்துகிறவர்கள் சுயகருத்தேற்றத்தில் “நான் ஆரோக்கியமாய் இருக்கிறேன்” என்று திரும்பத் திரும்பச் சொல்லாம்.
இதில் ஒன்று மிகமிக முக்கியம் சுயகருத்தேற்றத்திற்காகத் தேர்ந்து கொள்கிற வாசகம், நேர்மறை வாசகமாய் இருக்க வேண்டும். உதாரணத்திற்கு, அச்சத்தால் அவதி கொள்கிறவர்கள். “நான் துணிச்சலோடு இருக்கிறேன்” என்று சொல்லலாம். “நான் அச்சமில்லாமல் இருக்கிறேன்” என்று சொல்லலாகாது.
“வார்த்தை மாறினால் வாழ்க்கை மாறும்” என்கிறார் கவிஞர் வைரமுத்து. அறிவுலகத்தின் உச்சநீதி மன்றமாய்த் திகழ்வது, உலகப் பொதுமறையாகிய திருக்குறள். அதன் தீர்ப்பு என்ன தெரியுமா? “சொல்லின் திறனறிந்து சொல்லிப் பழகிவிட்டால் அதுதான் வாழ்வின் அறமாகவும் பொருளாகவும் இருக்கும்” என்பதுதான் அந்தத் தீர்ப்பு.
“திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூங் கில்”
என்கிறார் திருவள்ளுவர். இராமனும், இலக்குவனும் சீதையைத் தேடிவரும் வழியில் அனுமன் எதிர்ப்படுகிறான். முதல் சந்திப்பிலேயே இங்கிதமான, இதமான சொற்களை சொன்னதால் அங்கேயே இராமனிடம் “சொல்லின் செல்வன்” என்னும் பட்டம் பெறுகிறான் அனுமன்.
“வீட்டுக்கு வீடு வாசல்படி” என்பது முதுமொழி. “வீட்டுக்கு வீடு வார்த்தைப்படி” இது புதுமொழி. வார்த்தைகள் நல்லவை எனில், வாழ்வை வளப்படுத்த அவையே வல்லவை. நல்லதைச் சொல்வோம். நன்மைகள் அடைவோம்.
(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)