வாழ்க்கை விளையாட்டு!
எத்தனையோ விளையாட்டுகள் இருந்தாலும் மனிதனைப் பைத்தியமாய் அலையவிடும் ஆளுமை கிரிக்கெட் விளையாட்டுக்கு உண்டு. நம் தேசத்திற்கென்று சில பாரம்பரிய விளையாட்டுகள் உண்டு. அவையெல்லாம் வெறும் விளையாட்டுகள் அல்ல. வாழ்க்கை என்றால் என்னவென்று புத்தி சொல்கிற உத்திகள்.
அந்த விளையாட்டுகளின் கதையைக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். இப்போது, உலக அளவில் “இன்&டோர் – கேம்ஸ்” பிரபலமாகியுள்ளன.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அத்தகைய விளையாட்டுகளில் இந்தியாவுக்கென்று தனி முத்திரை உண்டு.
அதிலும் பரமபதம் என்றொரு விளையாட்டு. பாம்புகளும் ஏணிகளும் நிறைந்திருக்கும். பலகையில் தாயம் உருட்டிப்போட்டு, காய்களை நகர்த்துவதும், ஏணி கிடைத்தால் ஏற்றமென்றும், பாம்பு கடித்தால் இறக்கம் என்றும் இந்த விளையாட்டு போகும். ஏற்ற இறக்கங்களைத் தாண்டி கடைசியில் பரமபதத்தை அடைகிற விளையாட்டு என்ன சொல்கிறது?
வாழ்வில் நமக்கு வரும் ஏற்ற இறக்கங்களால் பாதிப்பு அடையாமல், இரண்டையும் சமமாகக் கருதி ஏற்றுக்கொண்டால், பரமபதம் நிச்சயம் என்று இந்த விளையாட்டு நமக்கு விளக்குகிறது.
அதனால்தான் உலகத்தைப் படைப்பதும் காப்பதும் அழிப்பதும் இறைவனின், “அலகிலா விளையாட்டு” என்று பேசப்படுகிறது.
அது சரி… உலக வாழ்க்கைக்கான வழிகாட்டியாக விளையாட்டுகள் உள்ளனவா? உண்டு.
சின்னக் குழந்தைகளுக்கு ஒரு விளையாட்டு சொல்லித் தருவது நம் வழக்கம். கையை நீட்டச் செய்து, ஒவ்வொரு விரலாகத் தொட்டுக்காட்டி, “இது பருப்பு – இது நெய் – இது சாதம்” என்று வரிசையாகச் சொல்லி, “பருப்பு கடை” என்று முழங்கையால் கடைவோம்.
அதற்குப் பிறகு, “பாப்பாவுக்கு ஊட்டு. தாத்தாவுக்கு ஊட்டு. அடுத்த வீட்டுக்கு ஊட்டு. காக்காய்க்கு ஊட்டு. நாய்க்கு ஊட்டு” என்று ஊட்டச் செய்து, “நண்டூறுது & நரியூறுது” என்று ‘கிச்சுகிச்சு’ மூட்டுவோம்; சிரிப்புக் காட்டுவோம்.
இந்த விளையாட்டு என்ன சொல்கிறது?
“உணவை நீ மட்டும் சாப்பிடாதே. எல்லோர்க்கும் கொடு. உன் வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல. மற்றவர்களுக்கும் கொடு. மனிதர்களுக்கும் மட்டுமல்ல, பிற உயிர்களுக்கும் கொடு. கொடுத்துவிட்டு, ‘உம்’ என்று இருக்காதே. சிரி. கொடுப்பதில் சந்தோஷப்படு” என்று இந்த விளையாட்டு உணர்த்துகிறது.
ஆனால் மேலைநாடுகளிலிருந்து வந்த இன்டோர் கேம்ஸ் – குறிப்பாக கேரம்போர்டு. நிற வெறியின் வெளிப்பாடு. அதில் வெள்ளைக் காய்களுக்குக் கூடுதல் மதிப்பு. கறுப்புக் காய்களுக்குக் குறைவாக மதிப்பு.
அதெல்லாம் இருக்கட்டும். வாழ்க்கைக்குக் கிரிக்கெட் என்ன சொல்கிறது? பேட்டிங்கில் தொடங்குவோம். அதுதானே ஆரம்பம். வீசப்படும் பந்து, நம்மை நோக்கி வரும் வாய்ப்புகள். அவற்றை சரியாகப் பயன்படுத்தினால் ரன்கள் கிடைக்கும்.
கொஞ்சம் அசந்தால் விக்கெட் பறக்கும். வாழ்க்கையும் அப்படித்தான். வாய்ப்புகளைக் கோட்டை விட்டால் வீழ்ச்சிதான்.
பந்தை அடித்தாலும் அதைப்பிடித்து தடுக்கப் பதினோரு பேர் எல்லாத் திசைகளிலும் காத்திருக்கிறார்கள். அவர் நம்மை எதிர்ப்பவர்கள்.
எதிர்ப்புகளை முறியடிக்கும் வேகமும் விவேகமும் முக்கியம்.
அதைவிட கிரிக்கெட்டில் முக்கியம், பேட்டிங் செய்யும்போது துணை நிற்கும் நம்முடைய சகா, யாரும் தனியாக ஜெயித்துவிட முடியாது. தொழிலில் ஆகட்டும். வாழ்க்கையில் ஆகட்டும். துணையாக வருபவர் நம்மோடும், நாம் அவரோடும், ஒத்துப் போவது மிக முக்கியம். அந்த ஒற்றுமை இருந்தால்தான் ஜெயிக்கலாம்.
கடவுள் நம்மைக் கண்காணிப்பதுபோல் அம்பயர் இருக்கிறார். அவரின் இறுதித் தீர்வுக்குக் கட்டுப்படுகிறோம்.
இப்படி கிரிக்கெட்டைப் புரிந்துகொண்டால், எந்த அணி தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்க்கை விளையாட்டில் வெற்றிக் கோப்பை… நமக்குத்தானே!!
(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)