பொழுதுபோக்குக் கலைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் தரக்கூடிய சமூகம், அறிவில் தன்னிறைவு பெற்ற சமூகமாகத்தான் இருக்கும் என்றார் ஒருவர். இல்லை என்றேன் நான். அறிவில் தன்னிறைவு என்பது கோடைக்காலத்தின் தாக நிறைவு போன்றது. மேலும் மேலும் தண்ணீருக்குத் தவிப்பது கோடையின் இயல்பு. மேலும் மேலும் அறிவு வேட்கை பெறுவதே அறிவினர் இயல்பு.
அத்தகைய தேடலுக்கும் தவிப்புக்கும் ஈடு கொடுக்கும் விதமாக இலக்கிய மேடைகள் இருந்ததொரு காலம். தெளிந்த சிந்தனைகளும் கூரிய விவாதங்களும் மதி நுட்பம் ஒளிரும் உடனடி சொல்வீச்சுகளும் தமிழரங்குகளில், குறிப்பாக பட்டிமண்டபங்களில் கொட்டிக் கிடந்தன. இந்து சமய மரபுடன் ஆழமான தொடர்பு கொண்ட இதிகாசங்களையும் காவியங்களையும் இந்து சமய அறிஞர்கள் மட்டுமின்றி திரு.பால்நாடார், நீதியரசர் திரு.மு.மு.இஸ்மாயில் போன்ற மாற்று சமய அறிஞர்களும் நெறிமாறாமல் அணுகி நுட்பங்களை விரித்துரைத்தார்கள்.
பின்னர் என்ன ஆயிற்று?
1990களின் தொடக்கத்தில் தொலைக்காட்சி பட்டிமண்டபங்கள் ஒளிபரப்பாகத் தொடங்கின. ஜனரஞ்சகத் தலைப்புகளில் மகிழ்விக்கும் அம்சங்கள் கலந்து பல அறிஞர்கள் பேசத் தொடங்கினர். அதே விதமாய் பொதுவெளிகளில் குறிப்பாக இந்து சமய ஆலய வளாகங்களில் மாற்று சமய அறிஞர்கள் ஆலய நிகழ்வுகளுக்குப் பொருந்தாத தலைப்புகளை அளிக்க, அமைப்பாளர்களும் அங்கீகரிக்க, மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார், பேராசிரியர் திருச்சி இராதாகிருஷ்ணன், அ.ச.ஞா போன்ற பேரறிஞர்களின் ஆளுமையில் மிளிர்ந்த பட்டிமண்டபங்கள் நீர்த்துப் போகத் தொடங்கின.
பட்டிமண்டபங்கள் பட்டி மன்றங்கள் ஆயின. பட்டி மன்றங்கள் பாட்டு மன்றங்கள் ஆயின.
“பட்டிமண்டபம் பாங்கறிந்தேறுமின்” என்று பழைய இலக்கியங்கள் பேசின. “பன்னரும் கலைதெரி பட்டிமண்டபம்” என்றான் கவிச்சக்கரவர்த்தி கம்பன். “எட்டிரண்டு அறியாத என்னை பட்டிமண்டபம் ஏற்றினை ஏற்றினை” என்கிறார் வள்ளலார்.
இந்த விபத்து நிகழாமல் இருந்திருந்தால் கலை – பண்பாடு, இதிகாசங்கள் – காவியங்களின் மனிதப் பண்புகள், சமூக உறவுகள் போன்றவற்றின் செழுமையான அம்சங்களை இந்தத் தலைமுறைக்கு கேட்கவாவது கொடுத்து வைத்திருக்கும்!
-மரபின்மைந்தன் முத்தையா