இது கடிதமல்ல. சாட்சி சொல்ல வருகிற சாசனம். காருண்யமும் கம்பீரமும் மிக்கவொரு வாழ்க்கை முறையின் வரலாற்றுப் பெருமைகளை உணர்ந்து பேசும் உரைச்சித்திரம். சின்னஞ்சிறு விதை விருட்சமாவது தாவரவியலின் மர்மம். சின்னஞ்சிறு மூளை சாதனைச் சோலையாய் வளர்வது மானிடவியலின் தர்மம் அந்த அற்புதத்தை காலங்காலமாய் நிகழ்த்துபவர்கள் ஆசிரியர்கள்.
ஐ.ஏ.எஸ். படித்த அதிகாரியின் மகன்கூட, அப்பாவைக் கேட்கும் கேள்வி, “எங்க டீச்சரை விட ஒனக்கு விஷயம் தெரியுமா?” என்பதுதான். வாழ்வில் வெற்றி பெற்ற ஒவ்வொருவருக்கும் ஓர் ஆசிரியரோ ஆசிரியையோ உந்து சக்தியாய் இருந்தார். இருக்கிறார். இருப்பார்.
மனிதனாய் அவதாரம் எடுத்த கடவுளைக்கூட கைப்பிடித்து அழைத்துச்சென்று ஆளாக்கியவர்கள் ஆசிரியர்கள்தான் என்பது இராமாயணம் முதலாய இதிகாசங்களில் நாம் உணரும் உண்மை.
ஆசிரியராய் இருப்பதன் பலம் என்ன என்பதை ஆசிரியர்கள் பலரும் உணரமுடியாத சூழல் உருவாகி வருகிறதே என்னும் கவலை காரணமாகவே இந்தக் கட்டுரைத் தொடர் வருகிறது.
நாம் வாழ்ந்து கொண்டிருப்பது கடவுள் படைத்த பழைய உலகம்தான். ஆனால் ஒவ்வொரு மாணவ மனசிலும் ஆசிரியர் அறிமுகம் செய்வது புத்தம்புதிய உலகம். மாணவனுக்குள் ஒளிந்து கிடக்கும் திறமையை உணர்ந்து, சரியான தருணத்தில் வெளிக்கொணர்ந்து, அந்த உயிரை உயிர்ப்பு மிக்கதாய் ஆக்கும் ஆற்றல் ஆசிரியர்களுக்கே உண்டு.
தன்னால் என்ன முடியும் என்னும் சந்தேகக் கடலில் தத்தளித்த மாணவர்கள் பலருக்கு ஆசிரியரின் கனிவான வழிகாட்டுதலும் கண்டிப்பான வற்புறுத்தலும் கலங்கரை விளக்குகளாய் ஒளிர்ந்து கரைசேர்த்திருக்கின்றன.
ஆசிரியர் என்பதே பன்மைச்சொல்தான் என்றாலும் அது மரியாதைச் சொல்லாக கருதப்படுவதை அடுத்து ஆசிரியர்கள் என்பது பன்மைச் சொல்லாக வழக்கில் இருந்து வருகிறது. ஆசிரியர் என்னும் சொல், ஆச்சார்யர் என்னும் வடமொழிச் சொல் மருவி வந்ததென்பர் சிலர். குற்றம் நீக்குபவர் ஆசு இரியர் என்னும் பொருளில் ஆசிரியர் என்னும் பெயர் வந்ததாக அறிஞர்கள் சொல்வர்.
ஆசிரியர் என்ற சொல்லுக்கு தவறின்றிக் கற்றவர் என்றே பொருள்.
“மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன்- மன்னற்கு
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை சான்றோர்க்கு
சென்ற இடமெல்லாம் சிறப்பு”
என்கிறார் அவ்வையார்.
இங்கு “மாசறக்கற்றோன்” என்பது ஆசிரியரையே குறிக்கும். நம் தேசத்தின் மேனாள் குடியரசுத் தலைவர் திரு.சங்கர் தயாள்சர்மா, ஓமன் சென்றபோது ஓமன் நாட்டு மன்னர் தம் மன்னர் குல மரபுகளை மீறி சர்மாவை விமான நிலையத்தில் வரவேற்றாராம். செய்தியாளர்கள் கேட்ட போது, “அவர் குடியரசுத் தலைவர் என்பதால் அல்ல. பூனாவில் நான் படித்த போது என் ஆசிரியராய் இருந்தவர்” என்று மன்னர் பதில் சொன்னாராம். அவ்வை சொன்ன சொல் ஓமனில் பலித்ததல்லவா!
ஆசிரியர் என்பது தமிழ்ச்சொல்லோ அல்லது ஆச்சார்யர் என்னும் சொல்லின் தமிழ் வடிவமோ எப்படியாயினும் பொருள் பொதிந்த சொல்லாக விளங்குகிறது. அதுபோல் ஆசிரியர்களை, ‘வாத்தியார்’ என்னும் சொல் மூலமாகவும் குறிப்பதுண்டு. வாய்மொழியாகக் கற்பிப்பவர் வாய்த்தியார் என்பதே வாத்தியார் என மருவியிருக்க வேண்டும்.
வாக்கினால் கற்பிப்பவர் என்ற பொருளில் வாத்தியார் என்ற சொல் பயன்படுத்தப் பட்டதாலேயே வாக்கு கற்றவனுக்கு வாத்தியார் வேலை என்றார்கள். ஆம். நினைவு வருகிறதா.. அதே வாசகம்தான்! வாக்கு கற்றுத் தருவது கல்வித்துறை.
ஒருவன் நடவடிக்கையை வைத்தே அவனை எடைபோடுவது காவல்துறை. இந்த இரண்டையும் இணைத்து சொல்லப்படும் வாசகம் ஒன்றை தவறாக சொல்லத் தொடங்கி விட்டார்கள். ‘வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை, போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை’ என்பதுதான் அம்மொழியின் திரிந்த வடிவம்,
“வாக்கு கற்றவனுக்கு வாத்தியார் வேலை. போக்கு கற்றவனுக்கு போலீஸ் வேலை’’ என்பதே சரியான வாசகம்.
நான் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் பேசும்போதெல்லாம் செப்டம்பர் 5 பற்றி கேட்பேன். ஆசிரியர் தினம் என்பார்கள். அன்று ஆசிரியர் தினம் கொண்டாடுவது ஏன் என்பேன். “இதுகூட தெரியாதா?” என்ற பாவனையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினம் என்பார்கள். அப்புறம் என்ன ஆனார்? ரிட்டையர் ஆனாரா?” என்பேன். “இல்லை! குடியரசுத் தலைவர் ஆனார்” என்பார்கள்.
இந்தியாவில்தான் ஆசிரியர் வேலைக்குப் பிறகு ஒருவர் குடியரசுத்தலைவர் ஆனார். அவர் டாக்டர் இராதாகிருஷ்ணன். இதே இந்தியாவில்தான் குடியரசுத் தலைவர் வேலை முடிந்ததும் ஒருவர் ஆசிரியர் வேலைக்குப்போனார். அவர் டாக்டர் அப்துல்கலாம்” என்பேன்.
ஆசிரியர்கள் தங்கள் துறை பற்றி பெருமிதம் கொள்வதும் அவசியம். மாணவர்களும் நிர்வாகமும் பெருமைப்படும் விதமாய் தகுதிகள் நிறைந்த ஆசிரியர்களாகத் திகழ்வதும் அவசியம்.
ஆசிரியர்கள் குறித்து இந்தத் தொடரில் நிறைய பேசப் போகிறோம். ஆசிரியர் இனம் குறித்த கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகளுடன் இந்த அத்தியாயத்தை நிறைவு செய்வோமா?
“சமுதாயக் கோட்டைக்கு சரித்திரத்துக் கதவுகளாய்
சார்ந்திருப்பது ஆசிரியர் கூட்டம் -அது
அமுதான கவிகாட்டும் அந்திவண்ணப் பூந்தோட்டம்
அறிவுமனம் நின்ற கலைக் கோட்டம்
ஏணியென மாணவரை ஏற்றிவிட்டுத் தாம்கீழே
இருப்பாரே இதுவன்றோ புதுமை- இந்த
மேனிநலம் பாராத மேதையரைப் பாடாமல்
மேதினியில் இருக்கிறதா கவிதை?
அன்னவரின் நெஞ்சினிலே ஆனந்தம் நின்றால்தான்
அறிவுநதி தேனாக ஓடும் -துன்பக்
கண்ணீரின் கரையோரம் கதைகேட்டு நின்றாலா
கவிதைமயில் அங்கெழுந்து ஆடும்?
மரபின் மைந்தன் முத்தையா
(தொடர்வோம்)