ஓர் ஆசிரியருக்கான தகுதிகளில் கல்வித்தகுதிக்கு நிகரான இன்னொரு தகுதி இருக்கிறது. அதுதான் கனிவுத் தகுதி.
ஒரு மரத்தில் கனிந்த கனிகளைத் தேடித்தான் பறவைகள் வரும். ஒரு பள்ளியில் கனிந்த மனங்களைத் தேடித்தான் மாணவர்களின் கூட்டமும் வரும்.
பள்ளிப் பருவத்தில் தங்கள் ஆசிரியர்களை நினைவுகூர்ந்து பேசும் அத்தனை பிரபலங்களும் ஆசிரியர்களின் அன்பை முதலில் ஆராதித்துச் சொல்கின்றனர். அறிவுத் திறன் பற்றி அடுத்ததாகப் பேசுகின்றனர்.
ஒரு மனிதனின் கனவு நனவாவது எப்போது என்பது பற்றி டேன் ரேதர் எனும் அமெரிக்காவின் பிரபலமான செய்தியாளர் ஒருமுறை சொன்னார்.
“உங்கள் கனவு நனவாவதென்பது, ஓர் ஆசிரியரிடம் தொடங்குகிறது. அந்த ஆசிரியர் உங்கள் மீது நம்பிக்கை வைக்கிறார். உங்களை உசுப்பி, உங்கள் வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு நகர்த்துகிறார். ‘உண்மை’ என்னும் கூர்முனை கொண்ட கோலால் உங்களை உந்தித் தள்ளிக்கொண்டே இருக்கிறார்.”
சிறந்த ஆசிரியர் என்பவர், பாடத்திட்டத்திற்கும் நிகரான இடத்தை பாசத்திட்டத்திற்கும் தருபவராக இருப்பார். படித்தல் போலவே படிதலும் முக்கியம் என்பதை மாணவர்களுக்கு உணர்த்துபவராக இருப்பார்.
எல்லோருக்குமே மற்றவர்கள் மனங்களில் ஒரு தாக்கம் ஏற்படுத்தும் தவிப்பு இருக்கும். ஆனால் அதற்கான வாய்ப்பு அமையாது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவும், அவர்களை உயர்த்தக் கூடிய ஊக்கத்தை வழங்கவும் உன்னதமான வாய்ப்பு ஆசிரியர்களுக்கே, அளிக்கப்படுகிறது.
சமூக வாழ்வின் பாதிப்புகளுக்கு பெரிது ஆளாகாத இளைய மனங்களுடன் இணைந்து பணியாற்றுகையில் ஓர் ஆசிரியருக்கு என்னென்ன சாத்தியங்கள் எல்லாம் உள்ளன?
வெற்றிகரமான மருத்துவராகவும் எழுத்தாளராகவும் விளங்கிய திரு.தீபக் சோப்ரா எது வெற்றி என்றொரு வரையறையைத் தருகிறார்.
“என்னைப் பொறுத்தவரை வெற்றி என்பது, அன்பாகவும் பரிவாகவும் இருப்பது. ஆனந்தத்தை உணர்வதோடு அதனை மற்றவர்களுக்குள்ளும் மலரச் செய்வது. நம் வாழ்க்கைக்கென ஓர் அர்த்தமும் ஒரு நோக்கமும் இருப்பதை உணர்வது. பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பில் இருப்பது. இதில் உறுதியாக இருந்தால், நாம் தேடும் செல்வங்கள் நம்மைத் தேடி வரும்.”
இவை அத்தனையும் ஓர் ஆசிரியரின் வாழ்வுக்கு அப்படியே பொருந்தும்.
இதே வேகத்தில் இன்னொரு மேற்கோளையும் பார்த்துவிடுவோம். நம் குறிக்கோள் நோக்கி நம்மை உந்தித்தள்ளும் மேற்கோள் இது. அட… இவர்கூட ஒரு மருத்துவர்தான். நீங்கள் நன்கறிந்த மருத்துவர்.
“வெற்றி என்பது மகிழ்ச்சியின் திறவுகோல் அல்ல. மகிழ்ச்சிதான் வெற்றியின் திறவுகோல். நீங்கள் எதைச் செய்தாலும் அதை மகிழ்ச்சியாக நேசித்துச் செய்வதன் மூலமே நீங்கள் வெற்றியாளர் ஆகிறீர்கள்” – சொன்னவர் ஆல்பர்ட் ஸ்வீட்ஸர்.
இப்படி இருந்தவர்கள் இணையற்ற ஆசிரியர்களாய் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு எத்தனையோ சான்றுகள் உண்டு.
‘ஆப்பிள்’ என்று சொன்னவுடன் நமக்கு ஸ்டீவ் ஜாப்ஸ் நினைவு வரும். அவருடன் இணைந்து ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கியவர், ஸ்டீஃபன் வோஸ்நியாக். ‘வோஸ்’ என்று செல்லமாக அழைக்கப்படுபவர். தன் வாழ்வின் உயரங்களைத் தொட்டபிறகு, அவர் சொன்னார், “என் தந்தை போல் ஒரு பொறியாளர் ஆக விரும்பினேன். என் நான்காம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு ஆசிரியைகள் என்மேல் மிகக்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினர்.
ஒரு சிறுவனின் வாழ்வுக்கு பள்ளிப் படிப்பு எத்தனை அவசியம் என்பதை என் பெற்றோர்களும் எனக்கு சொல்லி வந்தனர்.
எனவே ஒரே நேரத்தில், ஒரு பொறியாளராகவும், 4-5 வகுப்புகளின் ஆசிரியராகவும் ஆவதென்று தீர்மானித்தேன்” என்றார் வோஸ்.
ஒரு குழந்தை சந்திக்கும் முதல் மனிதர்களில் ஒருவர் ஆசிரியர். அவரே அந்தக் குழந்தையின் முன்மாதிரியாகவும் முதல் முன்னுதாரணமாகவும் ஆவதைவிட ஆசீர்வாதம் வேறேது!
அதனால்தான் சொல்கிறேன், ஆகச் சிறந்த கொடுப்பினை ஆசிரியர் ஆவது மட்டுமல்ல, ஆசிரியராகவே வாழ்வது…
மரபின் மைந்தன் முத்தையா
(தொடரும்)