ஒரு மாணவனை மகத்தான மனிதனாய் ஆசிரியரே வடிவமைக்கிறார் என்பதை முன்னர் சொல்லியிருந்தேன். “அது சரிதான். ஆனால், இது இந்த சமூகத்திற்கு எப்படித் தெரியவரும்” என்றோர் ஆசிரியர் வினவினார்.
அடிப்படையில் அது ஆசிரியர்களுக்கான பயிலரங்கம் என்பதால் ஏராளமான ஆசிரியர்கள் குழுமி இருந்தனர். எல்லோருமே பதிலுக்குக் காத்திருந்தனர்.
“அந்த மகத்தான மனிதர்கள் மூலம்தான் தெரியவரும். அதாவது, அந்த மாணவன் மகத்தான மனிதனாய் வாழ்வில் வரும்போது, தன் ஆசிரியர்களைப் பற்றி அவசியம் சொல்வான். அதன்மூலம் சமூகம் அந்த ஆசிரியரின் மாண்புகளை அறியும்” என்றேன்.
ஏதோ வாதத்திற்காக அவரை மடக்கிவிட்டேன் என்று பொருளல்ல. காலங் காலமாய் மகத்துவ மனிதர்களின் முதல் வேலையே தன் ஆசிரியர்களின் பெருமையைப் பேசுவதுதான்.
“இந்த வாழ்க்கையை வாழ்வதற்காக என் தந்தைக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். ஆனால் இந்த வாழ்க்கையை நான் நன்றாக வாழ்வதற்காக என் ஆசிரியருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.”
இப்படிச் சொன்னவர் யார் தெரியுமா? மாவீரர் அலெக்ஸாண்டர். அவரை சிறுவயதில் முட்டிக்குமுட்டி தட்டி வளர்த்த அந்த ஆசிரியர் நம் வணக்கத்துக்குரியவர்.
இப்போது சில ஆசிரியர்களுக்கு சந்தேகம் வரும். ஓர் ஆசிரியரின் எந்த அம்சத்தை மாணவர்கள் நினைவு வைத்திருப்பார்கள் என்று தெரிந்தால் சவுகரியமாக இருக்குமே? வில்லியம் ஆர்தர்வார்ட் என்ற அறிஞர் இதை வெட்டவெளிச்சமாய் வெளிப்படுத்தி விடுகிறார் பாருங்கள்.
“சராசரி ஆசிரியர் சொல்கிறார். நல்ல ஆசிரியர் விளக்குகிறார். சிறந்த ஆசிரியர் செயல்முறை விளக்கம் தருகிறார். மகத்தான ஆசிரியரோ தாக்கத்தை ஏற்படுத்துகிறார்” என்றார்.
ஓ! ஓர் ஆசிரியரிடம் மாணவருக்கு இவ்வளவு எதிர்பார்ப்பு இருக்குமா என உங்கள் புருவங்கள் உயர்வது புரிகிறது. அப்படியானால் ஓர் ஆசிரியர் மிகப்பெரிய மேதையாகவே திகழ்ந்து, தன் மேதாவித்தனத்தைப் பொழிந்து, மாணவர்களுக்கு தன் மகத்துவத்தை வெளிப்படுத்த வேண்டுமா?
அப்படியில்லை. எலிஃபஸ்லெவி என்பவர் சொல்வதைக் கேளுங்கள். “தன் வகுப்பில் எந்த மாணவன் படிப்பதற்கு மிகவும் சிரமப்படுகிறானோ, அந்த மாணவனின் இடத்தில் தன்னை வைத்துப் பார்க்கத் தெரிந்தவரே மகத்தான ஆசிரியர்” என்கிறார்.
அதாவது வகுப்பின் மிக மோசமான மாணவன் மனதில் நேசமான இடத்தில் இருப்பவரே நிகரற்ற ஆசிரியர் என்று பொருள்.
இது பெரிய கம்ப சூத்திரமா என்றால், இல்லை. குழந்தைகள் ஏற்கெனவே திறந்த மனநிலையில் இருப்பவர்கள். அவர்களின் கவனத்தை ஈர்த்து கற்பனைத் திறனைத் தூண்டுவதன் மூலமே அவர்களை மலர்த்தலாம்.
“இந்த வெளிப்பாட்டுத் திறனிலும் அறிவிலும் ஆனந்தத்தை ஏற்படுத்த ஓர் ஆசிரியரால் இயலும்” என்கிறார் ஒருவர். யார் தெரியுமா? ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்!
இந்தப் பொன்மொழிகளின் பொழிவுகளைப் பார்க்கிறபோதெல்லாம், வானத்தில் பறப்பது போல் இருக்கும். ஆனால் ஓர் ஆசிரியராக அன்றாட வேலைகளில் இறங்குவதில் இருக்கும் சிரமங்களைப் பற்றித் தெரியுமா என்றோர் எண்ணம் உங்கள் மனதில் ஓடலாம். அதையும் அறிஞர் பலரும் மிக நன்றாகவே அறிந்து வைத்திருப்பது உங்களுக்கு வியப்பைத் தரலாம்.
“கையில் போதிய கருவிகள் இல்லாமல், எட்ட வேண்டிய நிர்ப்பந்தத்தில் வாழ்கிறவர்கள் ஆசிரியர்கள். ஆனால், இதில் அதிசயம் என்னவென்றால் அவர்கள் அந்த வேலையை எப்படியாவது முடித்துவிடுகிறார்கள்.” இதைச் சொன்னவர், டாக்டர் ஹெய்ம்கினாட்.
“அதை நான் வழிமொழிகிறேன்” என்றொரு குரல் கேட்கிறதே! யாரென்று பார்ப்போமா?
ஓ! அவர் மேகி கோலாகர். “இருக்கும் பணிகளிலேயே சிரமமான பணி, சிறந்த ஆசிரியராய் திகழ்வதுதான்” என்கிறார் அவர்.
இன்று எல்லாத்துறைகளிலும் முன்னேறிய நாடாக ஜப்பான் திகழ்கிறது. அந்த ஜப்பானில் ஒரு பழமொழி உண்டு. “ஆயிரம் நாட்கள் விழுந்துவிழுந்து பாடம் படிப்பதென்பது ஒரு நல்ல ஆசிரியர் முன்னிலையில் ஒருநாள் படிப்பதற்கு சமம்.”
இது ஏன் தெரியுமா? இதற்கான விளக்கம், இன்னோர் அறிஞரின் பொன்மொழியில் இருக்கிறது. “தான் சொல்லித் தருகிற பாடத்தைவிடவும் அந்த ஆசிரியரும் அவரின் இயல்புகளுமே முக்கியம்.” இப்படி சொன்னவர் கரிமென்னீங்கஸ்.
இந்த வரிசையில், உங்களைப் பற்றி உங்கள் மகத்தான மாணவர்கள் நிச்சயம் சொல்வார்கள்தானே!!
மரபின் மைந்தன் முத்தையா
(தொடர்வோம்)