ஒரு மனிதருக்கு குரு தேவையா?
முத்துக்குமார், கணபதி
குரு தேவை என்கிற தெளிவு ஏற்பட்டுவிட்ட மனிதருக்கு கண்டிப்பாகத் தேவை. தேவை ஏற்படும்போது தேடல் தானாக ஏற்படும்.
கண்ணும் கருத்துமாய், ஒரு வேலையைச் செய்தால்கூட அப்படிச் செய்யும் எல்லோர்க்கும் அதற்கான வெற்றியோ அங்கீகாரமோ கிடைத்துவிடுவதில்லை. இதுதான் தலைவிதியா?
தனுஷ்கோடி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர், ஸ்ரீவில்லிபுத்தூர்.
இதை விதி என்று ஒதுக்கிவிட முடியாது. எந்த ஒரு செயலுக்குமான அங்கீகாரத்திற்கென ஓர் அடிப்படை விதி உண்டு. செய்யப்படும் செயல், அதை செய்கிற மனிதனைவிட மிகவும் பெரிதென்பதை உணர்வதுதான் அது. தான் செய்யும் செயலில் யார் ஒருவர் கலந்து, கரைந்து, காணாமல் போய்விடுகிறாரோ அவரை உலகம் வலைவீசித் தேடி வலுக்கட்டாயமாய் இழுத்துவந்து பாராட்டும்.
தன் வேலையைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, முந்திரிக் கொட்டைபோல் முந்திக்கொண்டு வந்து முகம் காட்டத் துடிப்பவர்களை காலம் கண்டுகொள்ளாது.
இது தலைவிதி அல்ல. தலையாய விதி.