ஆசிரியர் : திரு.இளஞ்சேரல்
இளஞ்சேரலுடைய கருட கம்பம் உள்ளிட்ட எல்லா நூல்களையும் நான் வாசித்திருக்கிறேன். எல்லாப் பாத்திரங்களும் சட்டென்று மனதுக்குள் பதிந்துவிடும். வித்தியாசமான கதைக்களமாக இருக்கும்.
கட்சிதம் நாவல் முதல் வாசிப்பில் வேறு கதைக்களமாக இருக்கிறதே என்று யோசித்தேன். வாசிக்க வாசிக்க அவருடைய மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாக கட்சிதம் நாவலைச் சொல்லலாம் என்று கருதினேன்.
கொங்குப் பிரதேசத்தில் குறிப்பாக கோவை, இளஞ்சேரலின் சொந்த ஊராகிய இருகூர் பகுதியில் மார்க்சிய தாக்கமுள்ள குடும்பங்களில் நிகழ்கிற முக்கியச்சம்பவங்கள், சர்வதேச அரசியல், தேசிய அரசியல், உள்ளூர் அரசியல் போக்கு ஆகியவற்றை கதையின் ஊடாக சொல்கிற நாவல் கட்சிதம்.
இளங்கோவன்தான் கதையின் நாயகன். மார்க்சிய தொண்டர். நாயகனுக்குரிய பலங்கள் எல்லாம் சித்தரிக்கப்படாத இயல்பான மிகையற்ற மனிதன். திறமையான மனிதன். அப்பகுதியில் இருக்கிறவர்களின் மொத்தக் குடும்பமுமே கட்சியில் இருக்கும். எல்லோருமே தோழர்கள் என்பது மாதிரியான சூழல்.
கட்சிப்பணியில் இணைந்து பணியாற்றுகிற செம்மலருக்கும் இளங்கோவனுக்கும் நேசம் மலர்கிறது. அது விமர்சனத்துக்கு உட்படுகிறது. இருவரும் சொந்தம்தான். இந்தக் காதல்தான் கதைக்களமா என்றால் இல்லை. காதலைத்தாண்டி மனித உணர்வுகளும், உறவுகளும்தான் இந்நாவலின் பலம்.
குறிப்பாக, பொதுவுடைமை இயக்கத்தினர் எவ்வளவு பேர் தொடர்பில் இருக்கிறார்கள். எப்படிப் பழகிக்கொள்கிறார்கள், அவர்களின் வயதுக்குரிய அதிகாரத்தையும் உரிமையையும் எங்கெங்கெல்லாம் காட்டுகிறார்கள் என்பதை விளக்குகிறது கட்சிதம் நாவல்-.
சி.ஆர். என்கிற ஒரு பாத்திரம். கட்சியின் மூத்த தோழர். காட்பாதர் போல… அவரும் சில நண்பர்களும் இளங்கோவனுக்காக செம்மலரைக் கேட்டு தூதுபோகிறார்கள்.
ராக்கியன் பெண்ணுடைய அப்பா. கட்சிக்காரர்தான். ஆனால் தீவிரமாக இயங்காதவர். செம்மலரைப் பெண் கேட்டு தோழர்கள் செல்கிறபோது, ராக்கியன், நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் நாங்கள் வேற பக்கம் முடிவு பண்ணிட்டோம். ரமேஷ், DYFI அமைப்பின் மாவட்டப் பொறுப்பில் இருக்கிறார். கோஆப்ரேடிவ் வங்கியில் பணியாற்றுகிறார். அரசாங்க வேலையில் இருக்கிற பையன் என்று சொல்கிறார்.
செம்மலர் உறுதியாக இருக்கிறாள். இளங்கோவனின் தங்கை மதுமிதாவும் செம்மலரும் தோழிகள். சுஜாதா படத்தில் வருகிற பாட்டுதான் எனக்கு நினைவுக்கு வந்தது. ‘நீ வருவாயென நான் இருந்தேன். ஏன் மறந்தேன் என நான் அறியேன்’ என்கிற பாட்டு அது.
இளங்கோவன், குடும்பம் சார்ந்த ஆள் இல்லை. இளங்கோவன் கட்சி வேலை, கிரிக்கெட் விளையாடப்போவது, வேலைக்குப் போவது என்பதுமாதிரியான ஆள்.
எனக்கு கட்சிதான் பெரிது என்று சொல்கிற அளவுக்கு இளங்கோவன் இருக்கிறான்.
பொதுவுடைமை இயக்கம், மனங்களை எப்படிப் பண்படுத்தி வைத்திருக்கிறது என்பதற்குப் பல இடங்கள் இந்த நாவலில் இருக்கின்றன.
செம்மலர் திருமணத்திற்கு முன்பே, கட்சியில் நெருக்கடி வருகிறது. கதையின் நகர்வுகள் அழகாக இருக்கின்றன.
அரசியல் கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் தேர்வில் தேவகவுடாவை முன்னிறுத்தியபோது, ஜோதிபாசு முன்னிறுத்தப்பட வேண்டும் என்று ஒரு குரல் ஒலிக்கிறது. அந்நிகழ்வில் இளங்கோவன் உள்ளிட்டோர் இருக்கிறார்கள். கட்சியின் பொலிட்பீரோவில் முடிவு செய்துவிட்டார்கள். அதைப் பற்றி விவாதிக்கக் கூடாது என்கிறபோது, அதையே இந்த இளைஞர்கள் துடிப்பாகப் பேசி வெளியே போகிறார்கள். சி.ஆர்.அதற்கு மேலோட்டமாக துணை நிற்கிறார்.
இவர்களை மூன்று மாதங்கள், கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்கிறார்கள். அந்த வேளையில் செம்மலர் வேலைக்குப் போகிறார். பேருந்துக்குப் போகும்போதாவது செம்மலரைப் பார்க்கலாம் என்று இளங்கோவன் வண்டியுடன் போனால், ராக்கியன், பெண்ணை அழைத்துப் போகக் காத்திருக்கிறார். இளங்கோவனைப் பார்த்து, நீ யாருக்காக காத்திருக்கிறாய் என்று கேட்க, அதற்கு அப்பா வர்றார், அண்ணன் வர்றார் என்று சொல்லி சமாளிக்கிறான்.
செம்மலர் வரும்போது, ராக்கியன் வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை. உடனே இளங்கோவன் தன் வண்டியைக் கொடுத்து அனுப்புகிறான். செம்மலரும், ராக்கியும் செல்கிறார்கள். அப்போது மழை பெய்கிறது. ஒரு அப்பா தன் மகளிடம் சொல்கிற இயல்பான வசனம் கொண்ட அந்த இடம் எனக்குப் பிடித்திருக்கிறது.
வண்டியில் செல்லும்போது, அப்பா செம்மலரிடம், “இளங்கோவனை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செஞ்சுட்டோம். சங்கத்துக்கு வரக்கூடாதுன்னு சொல்லிட்டோம் தெரியுமில்ல. அவனோட அதிகமா பழகாதே. அவனுக்கு நக்சல்களோடயும், ம.க.இ.கவோடயும் தொடர்பிருக்க வாய்ப்பிருக்குன்னு கமிட்டி எச்சரிக்கை பண்ணியிருக்கு” என்றெல்லாம் சொல்லிக் கொண்டு வருகிறார்.
அப்பாவின் பேச்சுக்கு செம்மலருடைய எதிர்வினை என்ன என்பதை இளஞ்சேரல் அழகாக விவரிக்கிறார்.
“அவளின் காதுகளுக்கு இந்தச் செய்தியை மழை அனுமதிக்கவேயில்லை. அவள் பின்னால் வந்து கொண்டிருக்கிறவனின் வண்டி வெளிச்சத்தைப் பார்த்துக்கொண்டே வருகிறாள்” என்று எழுதுகிறார். இளங்கோவன் பின்னால் வந்துகொண்டிருக்கிறான் என்பதுதான் விஷயம். அப்பா சொன்னதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
செம்மலருக்கு இருந்த உறுதி அபாரமான உறுதி.
இதுபோன்ற சூழ்நிலைகளில் செம்மலரின் திருமணத்திற்கு முன்பே, செம்மலரின் காதல் விவகாரம் மட்டுமல்லாமல் பல்வேறு காரணங்களினால் இளங்கோவன் விஷம் அருந்துகிறான். அது பிரச்சினையாகிறது. அதிலிருந்து மீண்டு வருகிறான்.
செம்மலருக்குத் திருமணமாகிறது. அந்தத் திருமணத்திற்குச் சென்று திருமண வேலைகளையும் இளங்கோவன் செய்கிறான்.
மூன்று இடங்களில் ஜோதிபாசுவுடனான சந்திப்பு வருகிறது. ஓர் இடம் அநேகமாக கற்பனை. ஜோதிபாசு பிரதமராவது போல ஒரு காட்சி. இன்னோர் இடம், அவர் பிறந்த நாளுக்கு அவரைப் பார்க்கப்போகிறார்கள். தமிழ்நாட்டுப்பாதகை தாங்கிய இவர்களுக்கு வழிவிட்டு தனியே அழைத்துப்போகிறார்கள். ஜோதிபாசுவை சந்தித்து வணங்கி வாழ்த்துத் தெரிவித்துவிட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்களுக்கு நன்றி என்று அவர் நன்றி தெரிவிக்கிறார்.
மூன்றாவது சந்திப்பு கோவைக்கு ஓர் கூட்டத்திற்காக ஜோதிபாசு வருகிறார். அப்போது செம்மலர், ரமேஷ் தம்பதிக்கு குழந்தை பிறந்திருக்கிறது. இளங்கோவன்தான் ஜோதிபாசுவைச் சந்தித்து குழந்தைக்குப் பெயர் வைக்கச் சொல்லலாம் என்று யோசனை தெரிவிக்கிறான்.
அவரும் ஜோதிபாசு என்று பெயர் வைக்கிறார். அவையெல்லாம் மிக அழகான இடங்கள். ஜோதிபாசுவைப் பற்றிய வர்ணனை. அவருடைய தோற்றம், அவருடைய குணம், அவருடைய மென்மையான போக்கு, அவர் தன்னுடைய பிஏவிடம் பேசும் பாங்கு இவற்றையெல்லாம் விவரிக்கிற இடங்கள் அருமையானவை.
அதுபோலவே, ரமேஷ¨ம் இளங்கோவனும் பேசிக்கொள்கிற இடங்களும் அழகானவை.
ரமேஷ், “செம்மலர் உங்கள் பிரச்சினைய நேரடியாக சொன்னாங்க தோழர். ஸாரி, இரண்டு வீட்லயும் பேசி எல்லாம் முடிவு பண்ணிட்டாங்க. இப்ப என்ன பண்றதுன்னு தெரியல” என்கிறான்.
அவனுடைய துன்பத்தை இயல்பாக மறைத்துக்கொள்வதைப் போலவும், பிரச்சினைக்கெல்லாம் நானே காரணம் என்பதைப் போலவும் இளங்கோவன் அவனுக்குத் தெளிவாக்கி, தன்மீதுதான் தவறு என்பதைப் பக்குவமாகச் சொன்னான்.
அவர்கள் இருவருக்குமான உரையாடல் மிக அழகானதாக இருக்கிறது. ஆனால் அதற்குப் பிறகுதான் இளங்கோவன் மனதில் ஓர் அழுத்தம் வருகிறது.
“அவன் புறப்பட்டான். இளங்கோவனுக்குள் நுழைந்த நிம்மதி தென்றல் வீசுவதாக உணர்ந்தான். எல்லாம் சரி. இந்த ஆரவாரங்கள் அனைத்தையும் தன்னால் தரிசனம் மட்டுமே செய்ய முடியும். மகிழ்ச்சியின் எல்லா ஊண்களையும் செம்மலர் பிடுங்கிக்கொண்டு போய்விட்டதை அறிந்தான். செம்மலர் அவன் மீதும், இவன் அவள் மீதும் கொண்டிருந்த அளப்பரிய காதலை, அந்த இருதயத்தை அவன் பிடுங்கிக்கொண்டு போன துயரம், சில கணங்களில் துள்ளிக்கொண்டு முன்னால் நிற்கிறது.”
கட்சியிலும், வீட்டிலும் இளங்கோவனைப் பொருட்படுத்துவதில்லை. இந்த இடத்தை அவன் மன நிலையை மிக அழகாக இளஞ்சேரல் எழுதுகிறார்.
“கட்சி, வீடு, தோழர்கள், நண்பர்கள் எல்லாம் வயதான நோயாளியை விலக்கி வைத்துக் கிடத்துவதைப் போல் தன்னை கைவிட்டுவிட்டதாக உணர்ந்தான். மைதானத்துக்கு வந்தால், சகலமும் மறந்து சிறுவனின் உற்சாகத்தை மனமும் உடலும் எடுத்துக்கொள்ளும். ஆனால் இப்போது அப்படியில்லை. கிரிக்கெட் விளையாடச் சென்றாலும் ஒரு நிதானமில்லாமல் தான் வருகிறான்.” அவையெல்லாம் அழகான இடங்கள்.
கதையின் போக்கைப் பார்த்தால், செம்மலருக்குத் திருமணமாகி, பிறந்த குழந்தைக்கு ஜோதிபாசு என்று பெயரிடப்படுகிறது. அந்தக் குழந்தை எப்படி இருக்கிறது என்று வழியில் பார்க்கும் கேட்கிறான். இன்னொரு குழந்தையிருக்கிறது. பள்ளிக்குப்போகிறது என்று சொல்கிறாள் செம்மலர்.
(தொடரும்)