கடையும் மத்தும் கடையூர்க்காரியும்
பால் போன்றதுதான் உயிர். அதில் விழும் வினைத்துளிகளில் உயிர் உறைந்து போகிறபோது வந்து கடைகிறது மரணத்தின் மத்து. மரணம் மட்டுமல்ல, மரணத்துக்கு நிகரான எந்த வேதனையும் உயிரை மத்துப்போல்தான் கடையும். சீதையைப் பிரிந்து இராமன் உற்ற துயரை அனுமன் சீதைக்குச் சொல்லும்போது,
“மத்துறு தயிரென வந்து சென்றிடைத்
தத்துறும் உயிரொடு புலன்கள் தள்ளுற
பித்து நின் பிரிவினிற் பிறந்த வேதனை” என்கிறான்.
குளிர்ந்த தயிரை மத்தால் கடைந்தால் துனி பறக்கும். ஆனால் உயிராகிய தயிர் கடையப்படுகிறபோது புலன்களில் நெருப்புப் பொறியே பறக்கிறது என்கிறார் மாணிக்கவாசகர்.
“மத்துறு தண்தயிரின்புலன் தீக்கதுவக் கலங்கி” என்கிறார்.
அப்படித் தள்ளாடும் உயிர் தளராத வண்ணம் கதிதரக்கூடிய காருண்யை அபிராமவல்லி ஏனெனில் பிறத்தல் இருத்தல் இறத்தல் ஆகியவற்றுக்கு அதிபதிகளான மூவரும் வந்து அவளுடைய திருவடிகளைத்தான் பணிகிறார்கள்.
“ததியுறு மத்தில் சுழலுமென் ஆவி தளர்விலதோர்
கதியுறு வண்ணம் கருதுகண்டாய் கமலாலயனும்
மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வந்து சென்னி
துதியுறு சேவடியாய் சிந்துரானன சுந்தரியே.”
மூவரில் மிக்க மகிழ்வுடன் துதிப்பவர் சிவபெருமாந்தானாம். தன் மனைவியின்மீது முழு உரிமை இருப்பினும் அவள் பெருமையறிந்து மனதார வாஅங்குவதில் மலர்கிற மகிழ்ச்சி அது. எனவே “மதியுறு வேணி மகிழ்நன்” என்கிறார் பட்டர். திலகந்தீட்டிய திருநுதலாள் அபிராமி கலகம் நிகழும் நொடியில் உயிரின் கலக்கம் நீக்கி கதியளிப்பாள் என்கிறது இந்தப்பாடல்.