(14.04.2019 அன்று கோவையில் “வாசனைகளால் ஆனது வாழ்வு “எனும் பொதுத்தலைப்பில் நிகழ்ந்த கவியரங்கில் பிறவி வாசனை எனும் தலைப்பில் வாசித்த கவிதை. தலைமை: பொற்கிழிக் கவிஞர் சொ.சொ.மீ.சுந்தரம் )
மண்ணனுப்பும் வாசனையோ முகிலுக்காக
மலர்களது வாசனையோ வண்டுக்காக
கொண்டுவந்த பழையபல வாசனைகள்
கடந்தகாலம் எண்ணுகிற நினைவுக்காக
பண்டுபல பிறவிகளாய் வந்து வந்து
பூட்டிவைத்த வாசனைகள் எதற்கோ என்றால்
உண்டாக்கி வரும்பிறவி வேரறுத்து
உயிர்கரைந்து போகின்ற முக்திக்காக
எத்தனையோ பிறவிகளை எடுத்ததுண்டு
ஏதேதோ வடிவெடுத்து வந்ததுண்டு
இத்தனைபேர் அரங்கினிலே இருக்கின்றோமே
இதுபோலே முன்னெங்கோ இருந்திருப்போம்
தத்துவமோ புனைகதையோ அல்ல -ஈது
தர்க்கத்தின் எல்லைக்குள் வருவதல்ல;
வித்தெனவே விழவைத்தான் இறைவன் -நூறு
விழுதுகளை நாமிறக்கி வளருகின்றோம்
சிற்றுயிராய் பூமியிலே பிறந்தோம் -பின்னர்
சமுத்திரத்தில் மீனாக கிடந்தோம்
மற்ற பல விலங்குகளாய் பிரிந்தோம்- இங்கே
மனிதர் என்றும் பலதடவை பிறந்தோம்
பெற்றவர்கள் உற்றவர்கள் நேசம்- பழம்
பிறவி தொட்டு தொடங்குகின்ற வாசம்
உற்ற பல வாசனைகள் சேர்த்தோம்- இந்த
உயிர் கலங்கி வாடுவதை பார்த்தோம்
கானகத்தில்திரிந்திருந்த கால்கள்- ஏதோ
குகைக்குள்ளே வாழ்ந்திருந்த நாள்கள்
வானகத்தில் போய்த் திரும்பி வந்தோம்- இந்த
வாசனைகள் இழுத்தனால் வந்தோம்
தேன் தடவி வைத்திருக்கும் நஞ்சு- இந்த
தேகம்மென்னும் வலையதனை அஞ்சு
ஞானியர்கள் சொல்லிச் சொல்லிப் பார்த்தார்- இவரோ
நாளும் நாளும் நூறு வினை சேர்த்தார்
ஒரு சிறுவன் வாத்தியங்கள் இசைப்பான் – அவன்
உள்ளபடி முற்பிறவிக் கலைஞன்
ஒரு மனிதன் தலைவனென உயர்வான்- அவன்
ஒரு காலம் ஆட்சி செய்த அரசன்
ஒருவன் இ ங்கே அறப்பணிகள் செய்வான்- அவன்
ஒரு காலம் வாழ்ந்திருந்த வள்ளல்
ஒரு கிழவன் தவறு செய்து விழிப்பான்- அவன்
உயிரதுவும் பாவங்களின் கந்தல்
கருவினிலே உடல் அரும்பும் பின்னே- ஒரு
கணப்பொழுதில் உயிர் நுழையும் போது
உருவெடுத்து என்னவெல்லாம் நடக்கும்- என
உள்ளபடி கணிப்பவர்கள் உண்டு
பிறப்பெடுத்து வந்திருக்கும் உயிரை-நூறு
புது வினைகள் விளைவிக்கும் பயிரை
வரவழைத்து ஆடவைக்கும் வேலை- அந்த
வித்தகனார் நடத்துகிற லீலை
பிறவிகளின் வாசனைக்கு இல்லை நாசி
பிராணாயமம் வழியே கட்டு வாசி
உறவிருந்தும் துறவியென உலகை நேசி
உயிருக்குள் உயிரான இறையைப் பூசி
மறந்திருந்தும் பழையவினை பிணிக்கும்- யோசி
மிகுந்தசுமை சுடுவதெல்லாம் குருவின் ஆசி
நிறைவிந்த வாழ்வென்னும் நிலையை யாசி
நினைத்துப்பார்- பிரபஞ்சத்தில் நாமோர் தூசி
நானென்ற அடையாளம் நீங்கும் நேரம்
நாம்சுமக்கும் பாரங்கள் குறைந்து போகும்;
வானென்ற முகவரிதான் வாழ்ந்த வீடு;
விபரமிது புரிகையிலே வினைகள் மாறும்;
தானேதான் நீயென்று தெய்வம் சொல்லும்;
திருவாக்கை உணர்ந்தமனம் சாவை வெல்லும்;
தேனென்றே எழுதிவைத்தால் தித்திக்காது
தேகத்தை யோகத்தில் இருத்து போதும்’
சிலநேரம் விலங்குகளாய் சீறுகின்றோம்
சிலபிறவி விலங்குகளாய் வாழ்ந்ததாலே;
பலநேரம் சுதந்திரத்தை தேடுகின்றோம்
பறவைகளாய் பிறவியிங்கு கண்டதாலே;
கலவரங்கள் மனதுக்குள் வருவதெல்லாம்
கண்டபல அனுபவத்துக் குவிய;லாலே
அலைபாயும் நினைவுகளை அடக்கிப் பார்த்தால்
அமரநிலை அதான்வழியே அடையக் கூடும்;
பகைவர் என இன்று இருக்கும் ஒருவர் போன
பிறவியிலே நண்பர் என இருந்திருப்பார்
தொகை வாங்கி ஏமாற்றும் மனிதர் ஏதோ
தொல் பிறவி தன்னில் கடன் தந்திருப்பார்
வகையறியா நேசத்தில் பழகும் அன்பர்
விரோதத்தில் எப்போதும் இருந்திருப்பார்
முகையவிழும் நொடியதனை அறியும் தேவன்
முற்பிறவி பிற்பிறவி அறிவான் நன்றாய்
வாழ்வெனும் பெரு நதியில் விழுந்தோம் நாமும்
வினை என்னும் சுழலுக்குள் சிக்கிக் கொண்டோம்
தாழ்வென்றும் உயர்வென்றும் வருவதெல்லாம்
தாம் முன்னர் செய்ததனால் விளைவது அன்றோ
ஊழென்னும் கயிறு நம்மை ஆட்டுவிக்கும்
உண்மை இதை நாம் உணர்ந்து வினை அழித்தால்
ஏழ்பிறவி சுட்டெரிக்கும் குருவின் பாதம்
என்கின்ற தோணி பற்றி கரையில் சேர்வோம்
சேர்த்த வினை எரியும் வரை பிறவி தோன்றும்
சேரும் வினை புதுப் பிறவி எடுக்க வைக்கும்
கோர்த்துவிடும் கண்ணிகளை அறுத்து விட்டு
குருவருளே கருவறையின் கதவடைக்கும்
தீர்த்தத்தில் செய்த வினை கரைந்து செல்லும்
தர்மத்தால் வினைமூட்டை கரைந்து செல்லும்
வார்த்தைகளில் பக்குவங்கள் வருமேயானால்
வாழ்க்கையிலே தெளிவு வரும் வெளிச்சம் தோன்றும்
இல்லாத ஏழையர்க்கு உதவும்போது
இருக்கின்ற தீயவினை குறைவதுண்டு
கல்விக்கு உணவுக்கு கொடுக்கும்போது
குறுக்கில்வரும் தடைகள் எல்லாம் குறைவதுண்டு
செல்வத்தை கருவி என்று பெரியோர் சொன்னார்
சூட்சுமத்தை நாம் உணர வேண்டும் கொண்ட
வல்லமைகள் பயனளிக்க வேண்டுமென்றால்
வினையறுக்கும் வித்தகத்தைப் பழக வேண்டும்
வட்டெறிந்து விளையாடும் வாலையோடு
விடையேறும் பரமனவன் விளையாட்டாக
விட்டெறிந்த விதைகள்நாம்- உயிர்கள் ஆனோம்
விதம்விதமாய் பிறவிகளில் வந்து போனோம்;
தட்டழிந்த நிலைபோதும் என்றே அந்த
தாண்டவனின் அருள்தேடி- நமது மூட்டை
சுட்டெரித்து விடுகின்ற பருவந் தன்னில்
சேர்ந்திருந்த வாசனைகள் தீர்ந்து போகும்;
பந்தயங்கள் பலநூறு போட்டுப் பார்த்தோம்
போட்டிகளில் வெற்றிபெற்றோம்- தோற்றும் போனோம்
வந்தவழி தெரியாமல் தொலைந்து போனோம்
விடபெற்றுப் போகும் வழி மறந்து போனோம்
சொந்தசுமை போதாமல் பிறவி தோறும்
சேர்த்தசுமை நாம்சுமந்து நொந்து போனோம்
இந்தநிலை தொடராமல் இருப்பதற்கு
இறைவனவான் திருவடிக்கே ஆளாய் வாழ்வோம்