உலவிட வருவாள் தேவி
காரிருள் நிறத்துக் காரிகை ஒருத்தி காலடி சலங்கை கேட்கும்-அவள் மூரி நிமிர்ந்து முதலடி வைத்ததும் மூளும் வினைத்தொடர் தீரும் கூரிய முனையினில் குருதியின் சிவப்பினில் குங்கும சூலம் ஒளிரும் மாரி அவள்வரும் வேளையில் தீநிறம் மேலைத் திசையினில் மலரும் ஒன்பது இரவுகள் ஒவ்வொரு வீட்டிலும் உலவிட வருவாள் தேவி அன்பினில் குழைபவர் அகந்தனில் ஒளியாய் அவள்நிலை பெறுவாள் மேவி முன்புசெய் தவத்தின் முழுவரமாக முற்றத்தில் கொலுவில் அமர்வாள் இன்பமும் கல்வியும் செல்வமும் எல்லாம் எண்ணிய விதமே தருவாள் கடம்ப வனத்தினுள் கொஞ்சிடும் இசையாய் கானங்கள் ஆள்பவள் அவளே உடம்பெனும் வனத்தினுள் உயிர்தடுமாற உதவிக்கு வருவதும் அவளே ...
எட்டிப் பார்த்தால்…
காலம் தனக்கென வைத்திருக்கின்றது கால காலமாய் உண்டியல் ஒன்று; முதன்முதல் வானம் உதிர்த்த விண்மீன், முதல்முகில் பொழிந்த மழையின் முதல்துளி வளைத்த தனுசு முறிந்த பொழுது தெறித்து விழுந்த தங்க மணிகள். கொடைக்கரம் இழுத்த மேகலையிருந்து நகைத்துச் சிதறிய நன்முத்துக்கள்; கந்தையில் மீந்த அவலொரு கைப்பிடி; உடைத்த சிலம்பின் உள்ளே இருந்து குதித்த மாணிக்கப் பரல்களில் கொஞ்சம், அன்னப்பறவையின் ஆதி இறகு; போதி உதிர்த்த இலைகளில் ஒன்று; சிலுவை செதுக்கிய மரத்தின் மிச்சம்; சிண்ட்ரெல்லாவின் சின்னச் செருப்புகள்; ஏதென்ஸ் நகரில் உருண்ட குவளை; குருதி தோய்ந்த குறுவாள்,கேடயம், துடிப்படங்கிய துப்பாக்கி ரவைகள் ...
உன்ஞாபகங்கள்..
நீர்க்குடத் தளும்பலின் நிமிஷத் தெறிப்பாய் வேர்த்தடம் தெரியும் வேம்பின் நிழலாய் பூத்துச் சிரிக்கப் போகிற அரும்பாய் சேர்த்து வைத்த மயிலிறகுகளாய் உள்ளே சிலிர்க்கிற சிலுசிலுப்புக்குள் ஊடே வருபவை உன்ஞாபகங்கள்.. பிரியாப் பிரிவின் பார இலகுவை சரியாய் உணரக் கிடைத்த சந்தோஷம் சின்ன வலியின் மின்னல்கள் அனுப்பி என்னுள் மழையைத் தொடங்கி வைக்கையில் வாசனைச் சரங்களை விசிறும் பூமி கால்பதியாது குதியிடும் காற்று சூட்டை அணைத்து கண் சிமிட்டும் சூரியன் சாட்டைக் கிரணங்கள் சொடுக்கும் நிலவு மூச்சின் வெம்மையில் குளிர்காய்வதற்கு எத்தனிக்கும் எரிமலைக் குழம்பு வெளிச்சத்திரையை விலக்கிக் கொண்டு வெளியே வருகிற நட்சத்திரங்கள் அகலாப் பார்வையை அழுந்தப் பதிக்கையில், ...
உன்கருணை- என் நிலைமை
பத்திரம் மிக்கது பத்திரம் அற்றது உன் கருணை நித்தியம் மிக்கது நிச்சயம் அற்றது என்நிலைமை பூவென மலர்வது பூகம்பம் அதிர்வது உன் கருணை சுடரென ஒளிர்வது சருகென அலைவது என் நிலைமை வாவென அணைப்பது வாள்கொண்டு துளைப்பது உன்கருணை தேவையில் நலிவது தேடலில் பொலிவது என்நிலைமை கேள்வியில் கிடைப்பது கேள்விகள் அழிப்பது உன்கருணை தோல்வியில் ஜெயிப்பது தோற்பதில் சிலிர்ப்பது என்நிலைமை ஒன்றும் சொல்லாதது ஒன்றும் தள்ளாதது உன் கருணை ஒன்றி நில்லாதது எங்கும் ...
வேதங்கள் நான்குமே வாசல்
கம்பிகள் நடுவே பாம்பாய் -அவள் கால்தொட நெளிகிற கூட்டம் செம்பொன் சிங்கா தனத்தே-எங்கள் சுந்தரி ஆள்கிற கோட்டம் நம்பி வருபவர்க்கு அன்னை-எங்கள் நாயகி மதுரை மீனாள் கும்பிடும் கைகளில் அவளே -துள்ளிக் கொஞ்சிடும் குழந்தையென்றானாள் மாடங்கள் சமைத்தனர் அழகாய்-எங்கள் மாதங்கி ராஜ்ஜியம் நடத்த கூடல் நகரின் தெருக்கள்-அவள் காலடி ஓசையில் சிலிர்க்க ஆடல் நிகழ்த்திய சொக்கன் -அவள் ஆருயிர்க் காதலில் களிக்க கூடலில் அவர்கண்ட இன்பம்-அந்தக் கோயிலில் கொட்டிக் கிடக்க தோளினில் கிளியினை அமர்த்தும்-அவள் தோழமை நமக்கொரு நலமாம் தாளினை உதறிய அசைவே-எட்டுத் ...
அலைவீச்சு
(26.09.2010) மதுரையில் ஈஷாவின் மகாசத்சங்கம். அருகே அழைத்த சத்குரு வாஞ்சையுடன் நலம் வினவி மிகுந்த கனிவுடன் தோள்களில் தட்டிய நொடியில் உள்ளே எதுவோ உடைய, அந்தத் தாக்கத்தில் எழுந்த கவிதை இது: தோளில் அவர்கரம் படிந்தது – ஒரு தூரம் உடனே தொலைந்தது வாள்போல் பார்வை நுழைந்தது-என் வினையின் வேரொன்று அறுந்தது பாதை இருளின் வெளிச்சமாய்-ஒரு பாறை கனமுள்ள அனிச்சமாய் ஓதிட முடியா உருக்கமாய்-இங்கே ஒருவரும் தராத நெருக்கமாய் பொற்கணம் அருளிய குருவிடம்-என் பொல்லா வினைகளை ...